fbpx
Homeதலையங்கம்வினேஷ் போகத் அவர்களே, மல்யுத்தத்தில் தொடருங்கள்!

வினேஷ் போகத் அவர்களே, மல்யுத்தத்தில் தொடருங்கள்!

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான இதுவரை எந்த போட்டியிலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார். இந்தியாவின் வினேஷ் போகத். இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம்,வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத். ஆனால் அவரது உடல் எடை நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக திடீர் அறிவிப்பு வெளியானது.

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என நாடே அவருக்கு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தியது.
3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இம்முறை தங்கப்பதக்கத்துடன் நாடு திரும்புவார் என நாடே கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்குள் வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.
“மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய துணிச்சல் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு குட்பை” என்று வினேஷ் போகத் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் ஏதோ சதி நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் கிளப்பப்பட்டுள்ளது. இது உண்மையா, பொய்யா? என விவாதிப்பதை விட அவரை மீண்டும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கச் செய்ய முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான முயற்சியை இந்திய ஒலிம்பிக் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் ஒரே வேண்டுகோள். ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்டோர் நினைத்தால் இது நடக்காமலா போய் விடும்? நிச்சயம் நடக்கும்.

வினேஷ் போகத் அவர்களே, தங்கத்தை வெல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் இந்தியர் அனைவரின் இதயத்திலும் தங்க மங்கையாகத் தான் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். நாடே உங்கள் பின்னால் இருக்கும்போது ஏன் மல்யுத்தப் போட்டியில் இருந்து விலக வேண்டும்?. வேண்டாம், விலகல் அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்.
ராயல் சல்யூட் அடித்து உங்களை வரவேற்க நாடே காத்துக் கொண்டிருக்கிறது!

படிக்க வேண்டும்

spot_img