தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆரம்பத்தில் பாஜக தரப்பில் பல வெற்றி வாய்ப்பு உள்ள முக்கிய தொகுதிகளை கோரிய நிலையில், அதிமுக அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நீண்டது. பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மயிலாப்பூர், மொடக்குறிச்சி, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, மதுரை தெற்கு, திருச்செந்தூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 27 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வரும் நிலையில், பாஜக-வில் மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்தத் தேர்தலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும் என்பது டெல்லி மேலிடத்தின் விருப்பமாக உள்ளது. ஆனால் அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
இதற்கிடையில், கோவை தெற்கு தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
இதனால் அண்ணாமலைக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலை நீடிக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகி வருவது பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கோவை வடக்கு தொகுதியை ஒதுக்கினால் மட்டுமே, தான் போட்டியிடுவதாக அண்ணாமலை பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிகிறது. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அனைத்து தொகுதிகளுக்குமான உத்தேசப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அண்ணாமலையின் விருப்பப்படி அவருக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை. வேறு தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.
அண்ணாமலை பிடிவாதக்காரர். அதனால் கோவை வடக்கு தொகுதி கிடைக்காவிட்டால் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தே விலகி விடுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அண்ணாமலை தான் காரணமாகி இருக்கிறார்.
ஆக, தேர்தலில் ஒதுக்கும் தொகுதியை ஏற்று அண்ணாமலை போட்டியிடுவாரா? போட்டியிடாமல் மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுப்பாரா? என்பது டெல்லி பாஜக தலைமை அதிகாரபூர்வ பட்டியலை வெளியிடும்போது தான் உறுதியாகத் தெரியவரும்!



