fbpx
Homeதலையங்கம்சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு தொடரக்கூடாது!

சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு தொடரக்கூடாது!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து பல்வேறு இன்னல்களை இடையூறுகளை செய்து வருகிறது. குறிப்பாக நிதி கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. இதில் முதன்மையாக தமிழ்நாட்டையே பாஜக குறிவைத்து பல்வேறு இன்னல்களை மாநில அரசுக்கு கொடுத்து வருகிறது.

அதோடு ஆளுநர்களை வைத்து மேலும் இடையூறுகளை திரைமறைவில் இருந்தபடி பாஜக ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரம்பத்தில் இருந்தே மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், தமிழ்நாடு அரசு குறித்து ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பொதுவெளியிலும் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது ஏதாவது ஒரு உப்பு சப்பில்லாத காரணத்தை கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.

ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் குவிந்தாலும் திருந்துவதுபோல் தெரியவில்லை. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது ஆளுநர், தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். ஆளுநர் ரவி இதுபோல் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல.

  • 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2022ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் ஆளுநர் உரையுடன் தொடங்கும் இந்த பேரவைக்கூட்டத்தொடரில், திமுக ஆட்சி அமைந்தபிறகு ஆளுநர் முதல்முறையாக தனது உரையை முழுவதுமாக வாசித்தார்.
  • அதன்பிறகு 2023-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இருந்த பெரியார், சுயமரியாதை, அம்பேத்கர், மகளிர் முன்னேற்றம், கலைஞர் ஆகிய வார்த்தைகளை வாசிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பதிலடி கொடுக்க, பேரவை முடியும் முன்பே எழுந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
  • இதைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில், “தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது. தேசிய கீதம் பாட வேண்டும்“ என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல், அமர்ந்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசிக்க, ஆளுநரும் வெளியேறினார்.
  • பின்னர் 2025-ம் ஆண்டு, கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.

இந்த ஆண்டும் நேற்றைய தினம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, ஆளுநர் ரவி, தனது உரையை வாசிக்காமல் அதே காரணத்தை கூறி வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரையின் ஒரு வார்த்தையைக்கூட ஆர்.என்.ரவி உச்சரிக்காத நிலையில், மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டையும் புனைந்திருக்கிறார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தான் வெளிநடப்பு செய்வார்கள். அவர்களோடு ஆளுநரும் வெளிநடப்பு செய்வதை தமிழ்நாட்டில் தான காண முடிகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் முறையாக வாசிப்பது நடைமுறை. அதனை ஆளுநர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

அதனால் தான், சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று அறிவித்தார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூட, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையின் போது இப்படி நடந்து கொள்ள அனுமதிப்பீர்களா? என்று வினா எழுப்பி உள்ளார்.

ஆளுநர் ரவியின் இந்த தொடர் மரபுமீறும் செயலுக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. அமைதியும், நல்லிணக்க சூழலும் நிலவி வரும் தமிழ்நாட்டில் மோதல் அரசியலுக்கு விதை தூவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, ராஜினாமா செய்யுங்கள் என்று அரசியல் கட்சி தலைவர்களின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு, உரை புறக்கணிப்பு தொடரக்கூடாது. தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் இது தான்!

படிக்க வேண்டும்

spot_img