மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாகனங்கள் எண்ணிக்கையும் பல்வேறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதன்காரணமாக சுற்றுச்சூழல் பெரியளவில் மாசடைகிறது.
இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித சமூகத்தால் உண்டு செரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பருவ காலம் மாற்றமடைகிறது, புவி வெப்பமயமாகிறது.
அதனால் ஏற்படும் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாமல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் நேர்கிறது. புவி வெப்பம் அதிகரிப்பதால் பேராபத்து காத்திருக்கிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
அரசும், தன்னார்வலர்களும் அவ்வப்போது இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு, இங்கிலாந்து அரசுடன் இணைந்து, தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பூர்வீக மற்றும் அரிய வகை தாவர இனங்களை பாதுகாப்பதே இந்த தாவரவியல் பூங்காவினை அமைப்பதற்கான நோக்கம் ஆகும். காடுகள், அலையாத்தி காடுகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இதுபோன்ற திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
பலே திட்டம் – தமிழ்நாடு அரசின் பெருமுயற்சிக்குப் பாராட்டுகள்!