fbpx
Homeதலையங்கம்தமிழ்நாடு வெள்ளமும் வயநாடு நிலச்சரிவும்!

தமிழ்நாடு வெள்ளமும் வயநாடு நிலச்சரிவும்!

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதில் சிக்கி இதுவரை 380 பேர் பலியாகி உள்ளனர். கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து கூறியிருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்காது என்று கூறினார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூலை 23 ஆம் தேதி அன்றே கனமழை குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது என்றும் அப்போதே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார்.

இதற்கு கேரள முதல்வர், புள்ளி விவரத்தோடு பதில் அளித்து, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக துல்லியமாகக் கணித்துச் சொல்ல இந்திய வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டது என்பதை அம்பலப்படுத்தினார். அமித்ஷா பொய் சொல்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்கள் எதுவுமே தெளிவானதாக இல்லை. இந்த நாள்... இந்த டைமில் தான் அலர்ட் தந்து இருக்கீங்க. ஆரஞ்ச் அலர்ட் தான் கொடுத்து இருந்தீங்க.. மண் சரிவு பற்றி எந்த அறிவிப்பையும் தெளிவாக தரவில்லை என்பதை புள்ளி விவரத்தோடு பினராயி விஜயன் தெரிவித்து இருக்கிறார்.
நெல்லை, தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தென் தமிழகத்தில் பெய்த இந்த பெருமழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்துச் சொல்லத் தவறியதே காரணம் என தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டாக முன்வைத்தது. தற்போது வயநாடு நிலச்சரிவையும் துல்லியமாகக் கணிக்கத் தவறி, இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் ஒரு முறை தோல்வியுற்று இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இயற்கை பேரிடர்களை சில மாதங்களுக்கு முன்பே கணிக்கும் ஆற்றல்மிகு தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பமே போதுமானது தான் என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவித்தாலும் வானிலை கணிப்பில் தவறு நேர்வது விலைமதிப்பற்ற உயிர்களோடு விளையாடுவதற்கு ஒப்பானது.

உயரிய தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளிடம் இருந்து பெறுவதில் இந்தியாவிற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதைத் தவிர்த்துவிட்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தை இன்னும் நவீனப்படுத்த வேண்டும். மக்களுக்கு புயல், மழை, நிலச்சரிவு பற்றிய துல்லியமான தகவல்களை கொடுக்ககூடிய அதி நவீன தொழில்நுட்பம் கண்டிப்பாக வேண்டும்.
இதற்கான முயற்சியை உடனடியாக முன்னெடுத்து வயநாடு நிலச்சரிவு போல இன்னொரு சம்பவம் நடைபெறாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img