Homeதலையங்கம்ரயில்வே அமைச்சரின் சாக்குபோக்கான பதில்!

ரயில்வே அமைச்சரின் சாக்குபோக்கான பதில்!

கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு புதிதாக எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான பிங்க் புக் வெளியாகி தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.976 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள முழுமையான பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் அந்த நிதி ரூ.301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

முக்கியமாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தடம், சென்னை – மகாபலிபுரம் – கடலூர் இடையே 179 கி.மீ கடற்கரை பாதை, ஈரோடு – பழனி -இரட்டை ரயில் 91 கி.மீ பாதை, காட்பாடி – விழுப்புரம் – இரட்டை ரயில் வழித்தடம், திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய ரயில் பாதை, ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை ரயில் பாதை, ஈரோடு -கரூர் இரட்டை பாதை ஆகிய முக்கியத் திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் பயணிகளுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக ஒரு கடிதத்தை நேற்று எழுதினார்.

இந்த கடிதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதில் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் நிலம் கையகப்படுத்தித் தருவதில் தமிழ்நாடு அரசின் தாமதத்தால் தான் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு என்பது போல சொல்லி இருக்கிறார். அரைத்த மாவை மீண்டும் அரைத்து இருக்கிறார்.

நிலம் கையகப்படுத்தித் தரவேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை தான். அதில் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு, வழக்கு என பல பிரச்னைகள் இருக்கும். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

அதற்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கித் தந்து, அந்த நிதியை செலவிட முடியாத நிலைக்கு காரணம் தமிழ்நாடு அரசு தான் என்று குற்றம்சாட்டினால் அது நியாயமாக இருக்கும்.

அதனை விடுத்து குறைகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து 1000 ரூபாய் தான் நிதி ஒதுக்க முடியும் என்றால் அது ஓரவஞ்சனை அன்றி வேறென்ன?
ஆகவே, ரயில்வே அமைச்சர் என்ன சாக்குபோக்கு சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் அதனை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதற்கு ஒரே பரிகாரம்.

முதலமைச்சர் கேட்டபடி, தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கி அறிவிக்க வேண்டும் – அதற்கான உறுதியை அளிக்க வேண்டும்.

மெட்ரோ திட்டத்திற்கு ஒரு பைசா கூட தராமல் வஞ்சித்தது போல இதிலும் தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசு ஓரங்கட்டப் போகிறதா? ரயில்வே அமைச்சரின் சாக்குபோக்கு பதில் அப்படித் தான் நினைக்கத் தோன்றுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img