மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே இனக்கலவரத்தால் மாநிலமே பற்றி எரிவது அனைவருக்கும் தெரியும். இந்த இனக் கலவரத்தால் அங்கே ஒட்டுமொத்த மாநிலமும் முடங்கியுள்ளது. மிக மோசமான நெஞ்சை உலுக்கும் சம்பவங்களும் அங்கு நடந்துள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க, நேற்று முன்தினம் இரவு பாரதிய ஜனதா கட்சி ஆளும் ஹரியானா மாநிலத்திலும் மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு என்ன காரணம்?
ஹரியானா மாவட்டம் நூஹ் மாவட்டத்தில் தான் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
அப்போது ஊர்வலத்தை நோக்கி சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மத ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நூஹ் மாநிலம் தொடங்கிய இந்த வன்முறை குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதில் சிலர் கொல்லப்பட்ட நிலையில், வன்முறையை தடுக்கும் பணிகளில் ஈடுபட்ட போலீசார் பலரும் இதில் காயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையால் குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
நூஹ் பகுதியில் மத ஊர்வலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்ததால் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. இரண்டு முஸ்லீம்களை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் ஊர்வலத்தில் பங்கேற்பதாக வதந்தி பரவியதே இந்த வன்முறைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நூஹ் மாவட்டத்தில் மத வன்முறை ஏற்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், சோஹ்னா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களிலும் வன்முறை பரவியது.
இதையடுத்து அங்கு பல சாலை மறியல் சம்பவங்கள் நடந்தன. சிலர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். கடைகள், வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறை சம்பவத்தால் ஹரியானா மாநிலம் முழுக்க பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ஹரியானா அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
சமூக வலைதளங்களின் மூலமாக வெறுப்பு கருத்துக்கள் பகிரப்படுவதை தவிர்க்க இணையதளம் முடக்கப்பட்டு உள்ளது. நூஹ் பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையாத வகையில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் அதிர்ச்சிகரமாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது அரியானா போலீஸ். குருகிராம் பகுதியில் உள்ள ஜமா மசூதியை இரவு 80 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, பள்ளிவாசல் இமாமை கொடூரமாக கொலை செய்து இருக்கிறது. மற்றொரு நபர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மறுபுறம் ஹரியானாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இந்த அளவுக்கு நடந்துள்ள வன்முறை, திடீரென்று நடந்தது அல்ல. இரு சமூகத்தினரும் நூஹ் பகுதியில் நீண்ட காலமாக அன்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு யாரோ விஷத்தை விதைத்துள்ளனர். சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். நுழைவாயில் மற்றும் கூரைகளில் கற்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது இது திடீரென்று நிகழ்ந்து அல்ல என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.
மணிப்பூரைப் போல ஹரியானாவிலும் வன்முறை தொடரக்கூடாது என்பதே நாட்டு மக்களின் கவலையாக மாறி இருக்கிறது. தற்போது புதிதாக வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
வன்முறைக்கு யார் காரணமாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும். வன்முறை தலைதூக்காமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
இன்னொரு மணிப்பூராக ஹரியானா மாறிவிடக் கூடாது, எச்சரிக்கை!