fbpx
Homeதலையங்கம்மணிப்பூரின் முதல்வரே… முதலில் பதவி விலகுங்கள்!

மணிப்பூரின் முதல்வரே… முதலில் பதவி விலகுங்கள்!

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. இரண்டரை மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது.

இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்ற எச்சரிக்கையோடு தலைமை நீதிபதி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மணிப்பூர் வன்முறை மீதான பிரதமர் மோடியின் அணுகுமுறை தற்போது விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. மணிப்பூர் கொடூரங்களை கண்டித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும், பாஜக மாநில அரசு பதவி விலக வேண்டும்; உடனடியாக அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிகள் பலமுறை வலியுறுத்தின. ஆனால் நேற்று காலை வரை அவர் மவுனமே காத்தார்.

இந்த நிலையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய வீடியோ வெளியாகி நாடே கொந்தளித்த நிலையில் தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அவர், “மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம்.

மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம். குற்றவாளிகள் தப்ப முடியாது” என்று தெரிவித்தார்.

சுமார் 1,800 மணி நேரத்திற்கும் அதிகமான மவுனத்திற்குப் பிறகு, மணிப்பூரைப் பற்றி பிரதமர் மனம் திறந்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தாண்டவமாடிக் கொண்டிருந்த வேளையில் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தீவிரம் காட்டினார்.

மணிப்பூரின் மக்கள் பிரதிநிதிகள் அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த போதிலும், அவர்களைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டு அமெரிக்காவுக்கு பயணப்பட்டார். வந்தே பாரத் ரயில்களுக்கு கொடியசைத்து விழாக்களை நடத்தினார், பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பறந்துவிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இப்போது நாடாளுமன்ற கூட்டம் நடக்கவுள்ள சூழலில் மணிப்பூரின் கொடூர நிலைமை பற்றிய வீடியோ வெளியாகிய பின் பிரதமர் வாய் திறந்து பேசியிருக்கிறார். பிரதமரின் பேச்சு மிகக் குறைவானது, மிகவும் தாமதமானது.

பிரதமர் மவுனம் ஏன்? தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைப்பதில் வல்லவர் என பாஜகவினரால் போற்றப்படும் அமித்ஷா மணிப்பூர் சென்று வந்தாரே. அதன்பிறகும் ஏன் அங்கே அமைதி திரும்பவில்லை? அம்மாநில முதல்வர் 2 மாதமாக என்ன தான் செய்து கொண்டிருந்தார்?&இதெல்லாம் நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள்.

ஆக, மணிப்பூர் பாஜக அரசு, பதவியில் நீடித்திருக்க எள்ளளவும் அருகதையற்றதாகும். இதுவரை நடந்துள்ள கொடூரங்களுக்கு மணிப்பூர் முதல்வர் மட்டுமல்ல பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அது தான்.

வெறும் வார்த்தைகளால் இனி ஒன்றும் செய்ய முடியாது. திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய காலகட்டம் இது. சிறுபிள்ளைத்தனம் கூடாது. மணிப்பூர் முதல்-மந்திரி உடனடியாக பதவி விலக வேண்டும். இத்தனைக்கும் பிறகு முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு அவர் என்ன சாதிக்கப் போகிறார்?

நிர்வாண ஊர்வல விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டும் போதாது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். அதற்கான தீவிர நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னெடுக்க வேண்டும். அவரை நம்புவோம்.
மணிப்பூர் முதல்வரே… முதலில் பதவி விலகுங்கள்.

வன்முறை ஓய்ந்து அமைதி திரும்பட்டும்!

படிக்க வேண்டும்

spot_img