fbpx
Homeதலையங்கம்தமிழ்நாடு முதல்வரின் மனிதநேய அறிவிப்பு!

தமிழ்நாடு முதல்வரின் மனிதநேய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது பாராட்டப்பட வேண்டிய மிகச்சிறப்பான நடவடிக்கை ஆகும்.

இயலாத சிலருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம் ஆகும். மனித குல சேவைக்காக அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வரவேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.

தன் உறுப்புகளை கொடையாக வழங்கி, பல உயிர்களைக் காப்பவர்களுக்கு இதை விட சிறப்பான மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளிக்க முடியாது.
உடல் உறுப்பு தானம் என்பது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனாலும் உடல் உறுப்புக்கள் செயலிழந்து போவதாலும், வேறு ஒருவரின் உறுப்புக்கள் கிடைக்காததாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இறக்கின்றனர். தேவைப்படும் நபர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே உடல் உறுப்புக்கள் கிடைக்கின்றன. மீதியுள்ள 90 சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா? மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம்.

ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

ஆக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு, மாமனிதநேயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். மனித மாண்பைப் போற்றும் செயல். உலகிற்கே ஓர் சீரிய அறிவிப்பை பிரகடனப் படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் ஒரு புதுமையான வழியை காட்டியுள்ளார்.
முதலமைச்சரின் முதல்தர அறிவிப்பை நாமும் வரவேற்றுப் பாராட்டுவோம்!

படிக்க வேண்டும்

spot_img