fbpx
Homeபிற செய்திகள்திருவாதவூரில் ரூ.1.51 கோடியில் 30 வீடுகள் வீட்டு உபயோகப் பொருள், கல்வி உபகரணங்கள் வழங்கல்

திருவாதவூரில் ரூ.1.51 கோடியில் 30 வீடுகள் வீட்டு உபயோகப் பொருள், கல்வி உபகரணங்கள் வழங்கல்

இலங்கைத் தமிழர்களுக்காக மதுரை மாவட்டத்தில் திருவாதவூர் முகாமில் ரூ. 1.51 கோடி செலவில் கட்டப்பட்ட 30 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார் முதல்வர்.

தொடர்ந்து, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

முகாம் மக்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களது நலனுக்காக தமிழ்நாடு அரசின் மூலம் தனியே ஒரு குழு செயல்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் 104 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 19,498 குடும்பங்களைச் சார்ந்த 58,272 நபர்கள் தங்கவைக்கப்பட்டு வசித்து வருகிறார்கள்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என அறிவித்ததுடன், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இத்திட்டங்கள் அனைத்தும் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவித்திருந்தார். அவற்றில் முதற்கட்டமாக, 3510 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ.176.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 20 மாவட்டங்களில் உள்ள 35 இலங்கைத் தமிழர் முகாம்களில் 3,510 புதிய வீடுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. அவற்றில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை முதல்வர் திறந்து வைத்தார்.

இதில் மதுரை மாவட்டத்தில் திருவாதவூர் முகாமில் ரூ. 1.51 கோடி செலவில் கட்டப்பட்ட 30 வீடுகளும் அடங்கும். புதிய வீடுகள் பெரும் முகாம் வாழ் பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான சாவி, 8 வகையான வீட்டு உபயோகப் பொருட்களையும், மரக்கன்றுகளையும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

முதல்வர் இலங்கைத் தமிழர் முகாம்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சாலை வசதிகள் புதிதாகவும் ஏற்கனவே உள்ளவற்றை உடனுக்குடன் சீர்படுத்தியும் தரப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, மேற்படி 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.11.33 கோடி செலவில் இதர அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் மதிப்புடன், மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதை இந்த அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது.

‘கனவு நனவானது’

திருவாதவூர் முகாமில் வசிக்கும் அருண் குமார், சாலினி தம்பதியினர் தெரிவித்ததாவது:
என் பெயர் சாலினி, என்னுடைய அப்பா, அம்மா 30 வருடங்களுக்கு முன்பாக இலங்கையிலிருந்து தமிழகம் வந்து விட்டனர். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மறுவாழ்வு முகாமில்தான்.

எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்கு பின்பும் நாங்கள் எங்களது அப்பா, அம்மாவுடன் ஒரே வீட்டில் இருந்து வந்தோம். எங்களுக்கென்று தனி வீடு என்பது நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

இப்போது அது நிஜமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு எங்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்துள்ளது. இந்த வீட்டில் பெரிய ஹால், சமயலறை, மின்சார வசதி, கழிப்பறை வசதி என அனைத்து வசதிகளும் உள்ளன.

எங்களுக்கென்று தனி வீடு என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் நலனை கருத்திற்கொண்டு இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றி என்றனர்.

‘பொங்கி வரும் சந்தோஷம்’


திருவாதவூர் முகாமில் வசிக்கும் அனிதா தெரிவித்ததாவது:
இலங்கையில் 1983-ல் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது எனது பெற்றோர் தமிழகத்திற்கு அகதியாக வந்தனர்.

நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறோம். தந்தை பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

எனக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். இப்போது எங்களுக்கு புதிய கான்கிரீட் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டில் நல்ல இடவசதி, பேன், லைட், மின்சார வசதி, டைல்ஸ் பதித்த தரை என மிக வசதியாக உள்ளது.

புதிய வீட்டிற்கு செல்லப்போகிறோம் என்று நினைக்கும்போதே உள்ளூர சந்தோசமாக உள்ளது. எங்களுக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
இ.சாலி தளபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ம.கயிலைச் செல்வம்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை.

படிக்க வேண்டும்

spot_img