fbpx
Homeதலையங்கம்ஆணையாளர் நாற்காலியில் தூய்மை பணியாளர் மகள்!

ஆணையாளர் நாற்காலியில் தூய்மை பணியாளர் மகள்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர். நகராட்சி தூய்மை பணியாளரான இவரது மனைவி செல்வி வீட்டு வேலைகள் செய்து வந்தார்.
ஏழைத் தம்பதியரான இவர்கள் தங்கள் மகள் துர்காவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கி இருக்கிறார்கள். பின்னர் கடந்த 2015-ல் துர்காவிற்கு 21 வயது இருக்கும் போதே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

துர்காவின் கணவர் நிர்மல் குமார் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
மகளை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது தான் தந்தை சேகரின் கனவு. தந்தையின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய துர்கா திருமணத்திற்கு பின்னரும் படிக்க தொடங்கினார். போட்டித் தேர்வில் பங்கேற்றார். ஆரம்பத்தில் தோல்வியே கிடைத்தது.

கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து 2020ல் குரூப் ஒன் தேர்வு எழுதினார். அதில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
அதன்பின்னர் இரண்டு குரூப் 4 தேர்வுகளை எழுதி உள்ளார். தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்ற துர்கா, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்விலும் வென்றார்.

தொடர்ந்து 2024ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று தற்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்க உள்ளார்.
இவருக்கு பணியாணையை வழங்கிய முதல்வர் மு.கஸ்டாலின், கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்காவே எடுத்துக்காட்டு என்று வாழ்த்தும் கூறியிருக்கிறார்.
முதல்வரின் கையால் பணியாணை வாங்கியதன் மூலம் சேகரின் மகள் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால் அதனை பார்க்கத்தான் துர்காவின் தந்தை சேகர் உயிருடன் இல்லை.
ஆனால் விடா முயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக… போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ரோல் மாடலாக அவர் மாறி இருக்கிறார்.
வாழ்த்துகள் துர்கா மேடம்!

படிக்க வேண்டும்

spot_img