fbpx
Homeதலையங்கம்ஓரணியில் எதிர்க்கட்சிகள்-களைகட்டிய பெங்களூரு!

ஓரணியில் எதிர்க்கட்சிகள்-களைகட்டிய பெங்களூரு!

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக பலம் வாய்ந்த எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்சிகளின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், ஜெயந்த் சவுத்ரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு பெங்களூர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மிகமிக முக்கியமானதாக இருக்கும் என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நடக்கும் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர்களின் சங்கமம் இது.

இதனால் பெங்களூரு மாநகரம் களைகட்டிக் காணப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான அனைத்து தோழமை சக்திகளையும் காங்கிரஸ் ஓரணியில் திரட்டுவதன் மூலம் அகில இந்திய அளவிலான காங்கிரஸின் தேவையை பகிரங்கப்படுத்தும் முயற்சி என்பதால் இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவை வீழ்த்த வியூகம் அமைத்து வருகிறது காங்கிரஸ். எதிரிகள் போல இருந்த தலைவர்கள் எல்லாம் இன்று பெங்களூரில் குவிந்துள்ளனர். அவர்களின் ஒரே நோக்கம் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்துவது மட்டுமே என்பதால் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட முயன்று வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒன்றுகூடி கைகோர்த்து வருகின்றனர்.பாட்னா கூட்டத்தைப் போல இந்த ஆலோசனை கூட்டமும் வெற்றிபெற்றால் அகில இந்திய அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைக்கும் வியூகம் வெற்றி பெறுமா?

அதே நேரத்தில் பாஜகவின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. பாஜக கட்சித் தலைமை மாநில வாரியாக தனது கூட்டணிக் கட்சிகளை உறுதி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பெங்களுரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அதே வேளையில் பாஜகவும் டெல்லியில் தனது கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்துகிறது.

எது எப்படியோ, நாடாளுமன்றத் தேர்தலில் பலே, சரியான போட்டி... என்பது போல இரு தரப்புக்கும் இடையே பலத்த போட்டி இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img