fbpx
Homeதலையங்கம்அண்ணாமலை யாத்திரையும் எடப்பாடியின் பிடிவாதமும்!

அண்ணாமலை யாத்திரையும் எடப்பாடியின் பிடிவாதமும்!

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? திடீரென இணக்கமாகிறார்கள், திடீரென சுணக்கமாகிவிடுகிறார்கள். என்னதான் நடக்கிறது அதிமுக கூட்டணிக்குள்?

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் நடைப்பயணத்தை ராமேஸ்வரத்தில் துவங்க உள்ளார். இந்த நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

அமித்ஷா தொடங்கி வைப்பதால், இந்த தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்பியது.

அதன்படி, விழாவில் கலந்து கொள்ள 3 பேருக்குமே பாஜக தேசிய தலைமை அழைப்பு விடுத்த நிலையில், “அவசியம் கலந்து கொள்ள வருவேன்” என்று உறுதியளித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனையும் பாஜக தலைமை அழைத்திருக்கிறது என்கிற விஷயம், அதற்கு பிறகுதான், எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது. இது தெரிந்ததும் அப்செட்டாகி உள்ளார்.

டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்தபோது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் அவர்களை சேர்க்கக்கூடாது என்று சொல்லியும், அவர்களை அழைக்கிறார்கள் என்றால், டெல்லி என்னதான் நினைக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.

அதனால் தான் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. பிடிவாதமாக இருக்கிறார். அதேசமயம் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பதால், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. வரும் தேர்தலை மையப்படுத்திதான், இந்த நடைபயணத்தையும் அண்ணாமலை மேற்கொள்கிறார். அப்படி இருக்கும்போது, அவரது தலைமையில் நடைபெறும் நடைபயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்து கொண்டால், அது அதிமுகவுக்கு சறுக்கலாகிவிடும்.

அதாவது, பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி ஏற்படுத்தும் என்று பிம்பம் மக்களிடம் ஏற்பட்டுவிடும். அதனைத் தவிர்க்கவே எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என்பது அதிமுகவினரின் ஒரு தரப்பு வாதமாக முன்வைக்கப்படுகிறது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவானது, அமித்ஷா மற்றும் பாஜக தரப்பில் அதிருப்தியை தந்துள்ளது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் இதே பிடிவாதத்துடன் கடைசிவரை உறுதியாக நின்றால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் தானாகவே அதிமுகவுக்கு வந்து விழும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மற்றொருபுறம், அதிக வாக்குவங்கியை வைத்துள்ள அதிமுகவின் ஓட்டுக்களை எப்படி பாஜக சாதகமாக்கி கொள்ள போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் முழுமையாக சரண்டர் ஆகத் தயாராக இல்லை. பாஜக தான் சற்று தணிந்து போவதாகத் தெரிகிறது. அண்ணாமலை பாதயாத்திரையில் இத்தனை பின்னணி இருக்கிறதா?

அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?

படிக்க வேண்டும்

spot_img