fbpx
Homeதலையங்கம்மோசடி நிதி நிறுவனங்கள்: மக்களே, இனியும் ஏமாறாதீர்!

மோசடி நிதி நிறுவனங்கள்: மக்களே, இனியும் ஏமாறாதீர்!

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மக்களிடம் கோடி, கோடியாக மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் குறித்த செய்திகள், தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது.

ஆருத்ரா நிறுவனம் ரூ.2,125 கோடி, ஐஎப்எஸ் நிதிநிறுவனம் ரூ.6000 கோடி, எல்பின் இ காம் நிறுவனம் ரூ.5000 கோடி… இதெல்லாம் அந்நிறுவனங்களின் ஈட்டிய லாபத்தொகை அல்ல; அத்தனை கோடிகளும் மக்களை ஏமாற்றி மோசடி செய்த தொகை தான்.

25 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி தருவதாகவும் பணத்தை வாரிச் சுருட்டும் இந்நிறுவனங்களுக்கு எந்தவொரு முதலீட்டுத்திட்டமும் இல்லை.

முதலீடு செய்பவர்களின் பணத்தைக்கொண்டே ஒரு சில மாதங்களுக்கு கூடுதல் வட்டியை சரியாகக் கொடுப்பார்கள். பிறகு மொத்தமாக பணத்தை சுருட்டிச் சென்று விடுவர். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த பாணியில் தான் மோசடியில் ஈடுபடுகின்றன.

இந்த வகை மோசடியை பான்சீ ஸ்கீம் என்று கூறுவதுண்டு.
கோவையில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட கிரீன் கிரெஸ்ட், டிரீம்ஸ் மேக்கர்குளோபல், ஏரோ டிரேடிங், வின்வெல்த், கொங்குநாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏமாந்தவர்களிடம் இருந்து புகார்களை பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மோசடி நடந்த பின் போலீஸ் என்ன செய்யும்? வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். கைது செய்வார்கள். ஆனால் இழந்த பணத்தில் எவ்வளவு திரும்பக்கிடைக்கும்? மிகமிக சொற்பத்தொகையே திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. கிடைக்காமலும் போகலாம்.

எனவே, மக்கள் இது போன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். பேராசை பெருநஷ்டம் என்று பெரியவர்கள் அன்றே சொல்லியிருக்கிறார்கள்.

கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு படிப்பறிவு இல்லாதவர்கள் மட்டுமின்றி படித்த மேதாவிகளே ஏமாந்து போவதுதான் விந்தையிலும் விந்தை ஆகும். காவல்துறை எவ்வளவோ எச்சரித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி தொடர்கிறது என்றால் யார் பொறுப்பு?

மக்களே நீங்கள்தான் முதல் பொறுப்பு. இனியும் ஏமாறாதீர்கள், உங்கள் பணம் உழைத்து சம்பாதித்தது & சும்மா வந்த காசல்ல. உஷாராக இருங்கள்!

படிக்க வேண்டும்

spot_img