fbpx
Homeதலையங்கம்பொதுசிவில் சட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்!

பொதுசிவில் சட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்!

இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம் , விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன.

முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. உதாரணமாக, சீக்கியர்கள் அவர்கள் மதச்சட்டப்படி, சுய பாதுகாப்பிற்காக எந்நேரமும் குறுவாள் வைத்திருக்கலாம்.

காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தாலும் கூட அங்குள்ள விதிகளுக்கு மாறாக சீக்கியர்கள் தாடி வைக்கலாம், துறைசார் தொப்பிக்கு மாற்றாக தலையில் டர்பன் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்கான தனி நபர் சட்டம் கூறுகிறது.

இந்து மதத்திலும் சில வகையான தனி சிவில் சட்டங்கள் உள்ளன. இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு.

அதாவது, சொத்துரிமை, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றை தீர்மானிக்கும் தனிநபர் சட்டங்கள் மாறுபட்ட கலாசார வளம் கொண்ட இந்தியாவில் சாதி, மதம், இனம் ரீதியாக மாறுபடும்.

இந்த வேறுபாடு கூடாது என்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க.. அரசு. குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைப் போல உரிமையியல் சட்டங்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி வாதிடுகிறது

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை.

தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.

இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி, “ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டதிட்டங்கள் எப்படிப் பொருந்தும்? அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது” என்று பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசி உள்ளார்.

அவரது கருத்துக்கு, பொதுசிவில் சட்டத்தை மக்கள் தாமாக ஏற்க வேண்டும், அதனைத் திணிப்பது சரியாகாது. வேலையின்மை, பணவீக்கம், மாநில உரிமைகளைப் பறிப்பது என்பதில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி இந்த பிரச்னையை கையிலெடுத்துள்ளார் என்று காங்கிரஸ் எதிர்வினையாற்றி உள்ளது. முதலில் இந்து மதத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமா? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியாவில் நிலவும் கலாசார பன்மை பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பெரும் தடைக்கல்லாக முன்நிற்கிறது. மாநிலத்திற்கு மாநிலம், சமூகத்திற்கு சமூகம், மதத்திற்கு மதம் மாறுபட்டு நிற்பதால் பொது சிவில் சட்டத்தை வரைவதே சிக்கலாக இருக்கிறது.

அரசியல் சாசனம், இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் விரும்பும் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் வழங்குகிறது. ஆனால், பொது சிவில் சட்டம் அந்த உரிமைகளைப் பறித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

பல தரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தனிநபர் சட்டங்களை விடுத்து, மதசார்பற்ற பொதுவான சட்டங்களை ஏற்கத் தயாராக இல்லை. ஒரு குழுவின் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களை மற்ற குழுக்களின் மீது திணிப்பது சரியாக இருக்காது.

நாட்டின் பன்முக தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தைச் செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.

இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img