வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வள்ளலார் வைதீக மதநெறிகளை, சாதி, சமய வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து தனி சமய வழி உருவாக்கியவர். வைதீகத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ரவி பேசியிருப்பது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வள்ளலார் தாம் வாழ்ந்த காலத்தில் சாதி, சமய ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவராக இருந்தார். இதனால் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சித்தி வளாகம், சத்திய ஞான சபை ஆகியவற்றை உருவாக்கினார்.
வைதீக மதம், சனாதன தர்மம் ஆகியவற்றை மிக கடுமையாக நிராகரித்தவராக திகழ்ந்தவர் வள்ளலார். அத்துடன் சொற்பொழிவாளர், படைப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராகவும் வாழ்ந்து புகழெய்தவர்.
வள்ளலார் தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தார். திருமுறைகள் உள்ளிட்ட படைப்புகளை தமிழ் நல்லுலகத்துக்கு வழங்கியவர். தமிழில் புலமை பெற்றவராக மட்டுமே இல்லாமல், தமிழ் உணர்வாளராகவும் இருந்தார்.
சமஸ்கிருத மொழியை சங்கரச்சாரியார், அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என கூறியபோது, என் மொழி தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி என வள்ளலார் கொடுத்த பதிலடி சரித்திரத்தின் பக்கங்களில் பேசிக் கொண்டிருக்கிறது.
வைதீக மதத்தை மிக கடுமையாக நேரடியாக எதிர்த்து சண்டை செய்தவர் வள்ளலார். தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் கரு கொள்வதற்கு முன்னரே அதன் வித்தை விதைத்துவிட்டு போன சிந்தனையாளர், சமூகப் புரட்சியாளர் வள்ளலார்.
வள்ளலார் சனாதனம் வலியுறுத்தும் நால் வருணம், ஜாதிய கட்டமைப்பு ஆகியவற்றை முற்றாக நிராகரித்தார். இந்த கோட்பாடுகளே தந்தை பெரியாருக்கும் திராவிடர் இயக்கத்துக்கும் அடித்தளமாகவும் அடிநாதமாகவும் இருந்தது. சனாதனத்தின் சங்கறுத்தவர் வள்ளலார்!
அந்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அப்பட்டமான திசைதிருப்புதல் என்பதே திராவிடர் இயக்கத்தவரின் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார்.
வெள்ளை அணிந்த வள்ளல் பெருமானை காவிச் சாய வேட்டி உடுத்திட்டவராகக் காட்டும் – பச்சை திரிபுவாதம் செய்யும் ஆர்.என்.ரவியின் தில்லுமுல்லுப் பிரச்சாரம்… உச்சக்கட்ட அபத்த வாதம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சனாதன ஆளுநர் அவர்களே! உங்கள் வாய் திறந்தாலோ சர்ச்சைக் கருத்துக்கள் தான் உதிர வேண்டுமா?
நாடே ஏற்கும் நாலு நல்ல வார்த்தை கூறுங்களேன்!



