நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் 60 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடு, கோழி, முயல், வண்ணத்துப்பூச்சி, பிறைநிலா உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் இடம்பெற்ற மலர்க் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. காய்கறி, தானிய சிற்பங்கள் மற்றும் மருத்துவ மூலிகை காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற பல்லுயிர் கண்காட்சியில் பொனி குதிரை, புங்கனூர் மாடு, அசாம் பிக்மி ஆடு, வெளிநாட்டு நாய் இனங்கள், பூனைகள், முயல்கள், வண்ணமயமான பறவைகள் உள்ளிட்ட 48 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும், அரசுத் துறைகளின் நலத்திட்ட விளக்க அரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனங்கள், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



