முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது துறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார். மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்.
இதற்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொள்ளாமல் பரிந்துரையை திருப்பி அனுப்பினார். இந்நிலையில் தான் நேற்று இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். மாறாக செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தமிழக அரசு அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளது.
அதாவது ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்புக்கு நடுவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளதோடு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அனுமதியின்றி செந்தில்பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக முடியுமா? முடியும் என்று தான் அரசியல் விமர்சகர்களும் ஆணித்தரமாக பதிவு செய்து வருகின்றனர். அதற்கு ஒரு முன்னுதாரணமும் உண்டு.
1991-96ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சராக இருந்தபோது ஆளுநராக இருந்தவர் சென்னாரெட்டி. இருவருக்குமே அட்டமத்தில் சனி. அந்த அளவிற்கு அவர்களுக்குள் கடும் மோதல் இருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதற்கு ஆளுநருக்கு ஜெயலலிதா பரிந்துரை கடிதம் கொடுத்தார். சென்னாரெட்டியோ அந்த பரிந்துரையை 15 நாட்களுக்கு மேலாக கிடப்பில் போட்டார். அப்போது ஜெயலலிதா என்ன செய்தார்? இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன செய்திருக்கிறாரோ அதைத் தான் அவரும் செய்திருந்தார்.
அதாவது இலாகா மாற்றங்களுக்காக அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார். வேறு வழியின்றி ஆளுநர் சென்னாரெட்டி ஒப்புதல் அளித்தார்.
சென்னாரெட்டி அவமானப்பட்டார். அப்போது ஒருவர் உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதா அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றியதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா செய்தது சரியே என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2010ல் அமித் ஷா கைதாகி சிறையில் இருந்த போது குஜராத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார். இதெல்லாம் ஆர்.என்.ரவிக்கு தெரியாமலா இருக்கும்?
அதேதான் இப்போதும் நடந்துள்ளது. முத்துசாமி, தங்கம் தென்னரசுக்கு செந்தில்பாலாஜியின் இலாகாக்களை ஒதுக்கியும் செந்தில்பாலாஜி துறைகள் இல்லா அமைச்சராக நீடிப்பார் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது முடிவு தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை உச்சகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
என்ன செய்யப்போகிறார், ஆளுநர் ஆர்.என்.ரவி? செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி தரப்போகிறாரா? அல்லது சென்னாரெட்டி போல அவமானப்படப் போகிறாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்!