fbpx
Homeதலையங்கம்ஆளுநர் ஆர்.என்.ரவி செயலும் 2014- உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!

ஆளுநர் ஆர்.என்.ரவி செயலும் 2014- உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ‘டிஸ்மிஸ்’ செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி நீக்கத்திற்கான காரணத்தை 5 பக்க கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து இருந்தார்.

அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் அரசியல் அமைப்பு சாசன நடைமுறையில் சீர்குலைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் செந்தில் பாலாஜியை ‘டிஸ்மிஸ்’ செய்வதாக ஆளுநர் கூறியிருந்தார்.

எனினும் சில மணி நேரங்களில் திடீர் திருப்பமாக செந்தில் பாலாஜியை ‘டிஸ்மிஸ்’ செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து முதல்வருக்கு ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுரைக்கு ஏற்ப முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஆளுநருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளித்து 6 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில், 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்கவேண்டும்? யார் நீக்கப்படவேண்டும்? என்பதை முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க, முழுக்க முதல்வரின் தனிப்பட்ட சிறப்பு உரிமையாக உள்ளது” என்று கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தால் ஆளுநர் – முதல்வர் மு.க ஸ்டாலின் இடையே வெடித்துள்ள மோதலையடுத்து 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பேசு பொருளாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் அப்படி என்ன உள்ளது?

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை அளித்தது.

அதில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர் என்பது அமலில் உள்ளது. முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகுவது ஒரு மரபாக இருக்கிறது.

அதே வேளையில், தீவிரமான குற்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசியல் சாசனத்தின் நோக்கத்திற்கு எதிரான ஒன்றாகும்.

விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்தால் அந்த நபரை பிரதமரோ, முதல்வரோ தங்கள் அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது.

ஆனால் யாரை சேர்ப்பது என்பதில் பிரதமரின் முடிவுதான் இறுதியானது ஆகும். அரசியல் சாசன ரீதியான நம்பிக்கையை பிரதமரே சுமக்கிறார். எனவே அந்த நம்பிக்கையை காக்க வேண்டியதும் அவர்தான். அரசியல் சாசனப்படி பொறுப்புடன் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரதமர் மீது உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை அப்படியே மாநிலத்திற்கு ஒப்பிட்டு பார்த்தால், அமைச்சரவையில் யாரை சேர்க்க வேண்டும் என்பதில் மாநில முதல்வருக்கு முழு உரிமை இருப்பதாக காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

தமிழ்நாடு அமைச்சர்கள் விவகாரத்தில் தேவை இல்லாமல் தலையிட்டு அதே முடிவை உடனேயே மாற்றிக் கொண்ட ஆளுநரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் அனைத்துமே தெளிவாக, அமைச்சர்கள் விவகாரம் என்பது ஒரு மாநில முதல்வருக்கான அதிகார வரம்புக்குட்பட்டது; அதில் மாநில ஆளுநர் தலையிடவே கூடாது என கூறி இருக்கின்றன.

அதனையும் மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி செய்திருப்பதற்கு கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசில் 3 ஆண்டுகள் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்த முகுல் ரோத்தகி, ஆளுநர் தமக்கான வரம்பை அப்பட்டமாக மீறி இருக்கிறார். அமைச்சர் ஒருவரை தன்னிச்சையாக ஆளுநரால் பதவி நீக்கம் செய்யவே முடியாது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆளுநர் செயல்படவே முடியும்.

தற்போதைய விவகாரத்தில் ஆளுநர் அப்பட்டமாக அதிகார வரம்பை மீறி உள்ளார் என சாடியுள்ளார். ஆக, ஆளுநர் மீது கண்டனக்கணைகள் வந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் துவங்க தமிழக அரசு தயாராகி விட்டது. இனி மோதல் யுத்தம் தான்.

இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தன் நிலையை மாற்றி மக்கள் நலன் கருதி மாநில அரசு இடையூறின்றி செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த கோரிக்கையை அவருக்கு வைப்பது இது முதல் முறை அல்ல. பலமுறை வைத்து விட்டோம்.

இனியாவது நல்லுறவைப் பேண ஆளுநர் முன் வருவாரா?

படிக்க வேண்டும்

spot_img