fbpx
Homeதலையங்கம்தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வாரா, ஆளுநர்?

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வாரா, ஆளுநர்?

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து பல்வேறு கருத்து மோதல்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆளும் அரசுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அதேபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இதனால் ஆளுநர் நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநர் சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை.

ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது மிகவும் முக்கியமான விஷயம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது. நீண்ட நாட்களாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது கவலைக்குரியது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

உச்சநீதிமன்றம் சீரியசான விஷயம் எனக் குறிப்பிட்டு கருத்துக் கூறி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில், ஆளுநர், மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்டமசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் சனிக்கிழமை (நவம்பர் 18) அன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும். இதில் எந்த மாற்றமும் இருக்காது.
மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பினால், அவற்றை கிடப்பில் போடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று அரசமைப்புச் சட்ட விதி கூறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதும், ஆளுநர் நிராகரித்து அனுப்பிய மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. மீண்டும் மசோதாக்கள் அனுப்பினால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இடித்துரையை கவனத்தில் கொண்டு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பாரா? அல்லது குறுக்கு சால் ஒட்டி மேலும் தாமதப்படுத்த வேறு ஏதும் வழி இருக்கிறதா? என தேடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!

படிக்க வேண்டும்

spot_img