fbpx
Homeதலையங்கம்சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக திரும்பிவர பிரார்த்திப்போம்!

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக திரும்பிவர பிரார்த்திப்போம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், நாசாவின் விண்வெளி வீராங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி, எட்டு நாட்கள் பணிக்காக போயிங் ஸ்டார்லைனர் விண்கலனில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் ஆகியோர் இரண்டரை மாதம் கடந்தும் அங்கு தங்கியுள்ளார்கள். விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இப்போது வரை அவர்களால் திரும்பி வர முடியவில்லை.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறும் நாசா, அவசர சூழ்நிலைகளில் பூமிக்கு திரும்ப அதை பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் பூமிக்கு திரும்புவது குறித்த முடிவு ஆகஸ்ட் மாத இறுதியில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் என்பது 210 நாட்கள் வரை விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு விண்கலம் ஆகும். பின்பு அது தானாகவே பூமிக்கு திரும்பி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமிக்குத் திரும்பி விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதிசெய்ய ஸ்டார்லைனர் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதையும் நாசா விஞ்ஞானிகள் மறுக்கவில்லை. இந்த சவாலான காரியத்தில் வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையோடு விஞ்ஞானிகள் இரவுபகலாக தீவிர கண்காணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் இருவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே காத்திருக்கிறது.
நாசாவின் முயற்சி வெற்றிபெற்று, இரு விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்குத் திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்!

படிக்க வேண்டும்

spot_img