fbpx
Homeதலையங்கம்பாலியல் கொடூரனுக்கு 702 வருடங்கள் சிறை!

பாலியல் கொடூரனுக்கு 702 வருடங்கள் சிறை!

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் போதைப் பொருள் பதுக்கல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதிலும் பாலியல் குற்றவாளிகளுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கமான ஒன்று.

மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார். இங்குள்ள 53 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்கள் இருக்கின்றனர். இவர் 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, தனது சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டார். குற்றம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் குற்றவாளியான காமுகனான தந்தை, தனக்கென வக்கீல் வைத்து கொள்ளாமல், குற்றத்தை ஒப்புக் கொண்டு, தான் மனம் வருந்துவதாகவும் அதனால் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி அபு பக்கர் மனத், குற்றவாளி தனது கொடுமையான குற்றத்திற்காக உண்மையிலேயே வருந்தும் வகையில் அவருக்கு 702 வருட சிறைத்தண்டனை விதித்ததோடு 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார்.

சமீபத்தில் இதே போல், சிங்கப்பூரில் தனது 15 வயது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக ஒருவருக்கு 218 வருட சிறைத்தண்டனையும், 75 பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட்டது. இந்த கடும் தண்டனை உலகம் முழுவதும் பேசும்பொருளாக மாறி இருக்கிறது. சரியான தீர்ப்பு என்பதில் சந்தேகமில்லை. இத்தனை வருடங்கள் அவன் சிறையிலா இருக்கப்போகிறான்? சாகும்வரை தான் சிறையில் இருப்பான்.

பிறகு ஏன் 702 வருட சிறை? உச்சபட்ச தண்டனை போதாது என்பதால் நீதிபதியின் கோபம் இப்படி கொப்பளித்து இருக்கிறது. அந்நாட்டு சட்டமும் அதற்கு அனுமதிக்கிறது. ஏனென்றால் குற்றத்தின் தன்மை அத்தனை தீவிரமானது. அதனால் தான் மலேசியாவில் இம்மாதிரியான குற்றங்கள் குறைவாக நடைபெறுகின்றன.

குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் பெற்ற மகளிடமே அத்துமீறும் சம்பவங்களும் இந்தியாவில் நடக்கவில்லையா? அதிகமாகவே நடக்கிறது. இம்மாதிரியான சம்பவங்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வராத நாளே இருக்காது.

அதற்குக் காரணம் மலேசியாவில் வழங்கப்படுவது போல மிகக்கடுமையான தண்டனை இந்தியாவில் வழங்கப்படுவதில்லை என்பது தான்.
மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் இந்தியாவிலும் வழங்க வேண்டும்.

போக்சோ சட்டம் போதாது என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்ட அல்லது குற்றங்களை கணிசமாக குறைக்க, வழங்கப்படும் தண்டனையை இந்திய அரசு இன்னும் கடுமையாக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img