fbpx
Homeதலையங்கம்செந்தில்பாலாஜி விரைவில் குணமடைய விரும்புவோம்!

செந்தில்பாலாஜி விரைவில் குணமடைய விரும்புவோம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்…தலைமை செயலகத்தில் ரெய்டு… கைது… நெஞ்சு வலி… ஆஞ்சியோ…பைபாஸ் ஆபரே ஷனுக்கு பரிந்துரை… தமிழ்நாடே பரபரத்துக் கொண்டிருக்கிறது.

வலுவான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர்களை, தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிய பாஜக அரசு குறிவைத்து தாக்கப் பயன்படுத்தும் ஆயுதங்கள் தான் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்திருப்பதும் அதன் தொடர் நடவடிக்கைளில் ஒன்றாகவேப் பார்க்கப்படுகிறது.
அவரது உடல்நிலை மிகவும் சீர்கெடும் அளவிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக்குழுவினரே பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இதனை நாடகமாடுவதாக சித்தரித்து பாஜக நிர்வாகிகள் மட்டும் அல்ல அக்கட்சியின் முன்னணித் தலைவர்களும் கிண்டலும் கேலியும் செய்வதைக் காண முடிகிறது.

அதேபோல செந்தில்பாலாஜியின் உடல்நலத்தைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அவரை சிறையில் அடைப்பதிலேயே அமலாக்கத்துறை குறியாக இருக்கிறது. அது ஏன்? கருணை, மனித நேயம் எங்கே போனது?
இந்த கேள்விகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
மூன்று புலனாய்வுத்துறைகளை தன்வசம் வைத்துக் கொண்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசு அச்சுறுத்த என்ன காரணம்?

2024 தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என பாஜகவுக்கு பயம் வந்து விட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விடாமல் தடுக்க நினைப்பதும் இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். அதற்கெல்லாம் தீர்ப்பு சொல்ல மக்கள் மன்றம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் திமுக அரசு மீது கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கமாக இருக்க முடியும். திமுக மீதும் திராவிட மாடல் அரசு மீதும் சேற்றை வாரி இறைத்தாலும் அவற்றை சட்டரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும் வலிமையும் அவற்றுக்கு உண்டு.
சட்டப்போராட்டம் ஆனாலும் மக்கள் போராட்டமானாலும் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுச் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வலிமை திமுகவுக்கு எப்போதும் உண்டு; இப்போதும் உண்டு.

இப்போதைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் குணமடைய விரும்புவோம்!

படிக்க வேண்டும்

spot_img