fbpx
Homeதலையங்கம்தேசிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெய்டு!

தேசிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெய்டு!

கடந்த மாதம் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது ஓட்டுநர், நடத்துனர் பணிகளை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாகவே அமலாக்கத்துறை இந்த சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின் போது செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு பரிந்துரைத்து உள்ளது.

அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், “தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன. பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர் களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.’’ என்று அவர் தெரிவித்து இருந்தார்.

அதேபோல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதற்கு கண்டனங்களை பதிவு செய்து உள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்த தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்து உள்ளார்.

வரும் ஜூன் 23 ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை சோதனையை பல மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சித் தலைவர்களும் கண்டித்து இருப்பது எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை மேலும் வலுவடைய செய்து இருப்பதாக தெரிகிறது.

பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை, அமைச்சர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இப்படி தன்வசம் உள்ள சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு சோதனை செய்வது என்பது தொடர் கதையாக நடந்து வரும் ஒன்று தான்.

இது தான் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை பாஜகவுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்துள்ளது. அது மட்டுமல்ல இது நாட்டு மக்களின் மனதில் நன்கு பதிந்து பாஜகவிற்கு எதிரான ஒரு எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

இது தான் கர்நாடகத் தேர்தலில் எதிரொலித்தது. டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் எதிரொலித்தது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பேரலையை உருவாக்கி புதியதோர் திருப்பம் ஏற்படுவதற்கும் இதுபோன்ற ரெய்டுகள் தான் காரணமாக அமையக் கூடும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து!

படிக்க வேண்டும்

spot_img