ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 43 வயதான அதிமுக கவுன்சிலர் சிகாமணி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கயல்விழி என்ற பெண், கடந்த டிசம்பர் மாதம் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாத 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சிகாமணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
பள்ளி மாணவிக்கு உதவுவதாகக் கூறிய சிகாமணி, தனியார் விடுதிக்கு மாணவியை தொடர்ந்து அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் கயல்வழி அறிமுகத்தின் பேரில் மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் பிரபாகரன் என்பவரும் மாணவியிடம் அத்துமீறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதையடுத்து மாணவி கதறி அழுதபடியே பெற்றோரிடம் இது குறித்து கூற, பெற்றோர் போலீசிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, கயல்விழி, அன்னலட்சுமி என்கிற உமா என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி மாணவியை ஒரு மாத காலமாக பள்ளிக்குச் செல்லவிடாமல் ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளனர். இது சாதாரணமான விஷயமல்ல.
இந்த சம்பவம் பொள்ளாச்சியில் மாணவிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை நினைவுபடுத்துவதாக உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்திலும் அதிமுகவினர் கைதானார்கள். பரமக்குடியில் அதிமுக கவுன்சிலரே கைதாகி இருக்கிறார்.
மேலும் இக்கொடூர பாலியல் வன்முறையில் நகரத்தின் சில முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விபரங்கள் வெளிவராமல் பாதுகாத்து, அவருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவர் படிப்பை தொடர்வதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்!