fbpx
Homeதலையங்கம்ஒபாமா குற்றச்சாட்டும் பிரதமர் மோடி பதிலும்!

ஒபாமா குற்றச்சாட்டும் பிரதமர் மோடி பதிலும்!

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் அரங்கேறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதுபற்றி விவாதிக்க வேண்டும் என ஜோபைடனுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்றார். பிரதமர் மோடி- & அமெரிக்க அதிபர் ஜோபைடன் இருவரும் சந்தித்து இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தனர். முதலீடு, தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன்பிறகு அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினர். இந்த நிலையில் பிரதமரும் அதிபரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

ஏற்கனவே பிரதமர் மோடி அமெரிக்கா சென்றது முதல், இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜோபைடன் கேள்வி கேட்க வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர் ஒருவர், இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?என கேள்வி கேட்டார்.

அதற்கு பிரதமர் மோடி இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் ஜனநாயக நாடுகள். ஜனநாயகம் என்பது டிஎன்ஏவில் உள்ளது. அதன்படியே அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது. எனவே சாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை’ என பதிலளித்தார்.

இந்நிலையில் தான் ஜோபைடன் & -பிரதமர் மோடி சந்திப்புக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு ஏதென்ஸில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேட்டியளித்தார்.

அப்போது அவர்,நான் பிரதமர் மோடியை சந்தித்தால் இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசி இருப்பேன்என வெளிப்படையாக தெரிவித்தார். இதுதொடர்பாக பராக் ஒபாமா பேசும்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு முக்கியமானது.

எனக்கு நன்கு அறிந்த நண்பர் பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால் ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்து இருப்பேன். இதுதொடர்பான வாதம் தான் முக்கிய பகுதியாக இருந்திருக்கும் என்று கூறினார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை சமமாகவே நடத்துகிறோம் என்று பிரதமர் மோடி கூறினாலும், அது உண்மை அல்ல என்பது போல அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கருத்துகள் பரவி இருப்பதையே பராக் ஒபாமாவின் எச்சரிக்கை, அமெரிக்க எம்பிக்களின் கோரிக்கை விளம்புகின்றன.

அதேநேரத்தில் இந்தியா ஜனநாயக நாடு, ஜாதி, மதசார்பற்ற நாடு, இங்கு அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

இந்தியாவில் எதிர்க்கட்சிகளும் சிறுபான்மை அமைப்புகளும் இதேக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்தபோதிலும் உலக அரங்கில் இப்போது சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை பறிக்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. இதனை மறுக்கிறார் பிரதமர் மோடி. இல்லை, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட வில்லை. அனைவருமே சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை உலக மக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மோடி.

இந்த விஷயத்தில் சமரசமே இன்றி சிறுபான்மையினரின் உரிமைகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை!

படிக்க வேண்டும்

spot_img