திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் சின்னதுரை என்ற மாணவரை 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அவரை தங்களிடம் இருந்த அரிவாளால் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அதனை தடுக்கமுயன்ற சின்னத்துரையின் தங்கை சந்திராவையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களின் தாத்தா அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
விசாரணையில், சாதிய பாகுபாடு காரணமாக சின்னதுரையுடன் படிக்கும் சக மாணவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அந்த மாணவரின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடியோ வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், “நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்` என வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்“ என்றும் முதல்வர் அறிவுரை கூறியுள்ளார்.
இத்தகைய வன்முறையில் ஈடுபடுகிற சிறுவர்களை குற்றவாளி என்று சொல்லக்கூடாது, சட்டத்திற்கு முரண்பட்டவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று மனித உரிமை தளங்களில் அறிவுறுத்தப்படுவது உண்டு.
ஆனால் இதுபோன்ற சாதி நோய் முத்திப்போய் இருக்கக்கூடிய இவர்களுக்கு கவுன்சிலிங் தாண்டி சட்டத்தின் மூலமாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
தன் மீது நடந்த கொடுமையை ஆசிரியரிடம் கூறியதற்காக இத்தகைய கொலை வெறியுடன் அரிவாள் தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள்.
கொலை செய்யும் அளவுக்கு போகிறார்கள் என்றால் அச்சமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பையன் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என்று வீட்டிலேயே இருந்திருக்கிறான். எத்தனை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பான்?
இந்த சம்பவத்தால் குற்றவாளிகளின் தரப்பில் அவர்களைப் பெருமை கொள்ளச் செய்யும் பேச்சுகளும், செயல்களும் இல்லாமல் இருக்க வேண்டும். குற்றவாளிகளை அந்த சாதியின் உதாரண வீரர்களாக மாற்றாமல் இருக்க வேண்டும். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாதபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து பல வருட காலங்களாக கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் வெளிப்படையாக சாதி மோதல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூகத்தில் புரையோடிக் காணப்படும் சாதிய பாகுபாடுகளை உடைத்தெறிய ஆசிரியர்களால் மட்டுமே முடியாது; பெற்றோர்களும் ஊர்ப்பெரியவர்களும் களமிறங்கி, தங்கள் பிள்ளைகளை சரியாக வழிநடத்தி சமத்துவத்தை பேண வேண்டும்.
மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவு மலரட்டும்!