தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2 நாள் கூட்டம் தெலங்கானாவில் நடந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் 6 உத்தரவாத திட்டங்களை கார்கேவும் சோனியாவும் அறிவித்தனர். அதன்படி முதல் திட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியை வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 2வதாக அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் எனவும், 3வதாக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுதவிர 4வது திட்டமாக வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 5வது திட்டமாக விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 6வது திட்டமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மக்கள் வாழ்வை மேம்படுத்தும் இலவசத் திட்டங்கள்.
தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்தது. இந்த திட்டம் நிதி நெருக்கடி காரணமாக தாமதமாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
திட்டத்தை பின்பற்றி கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அங்கே அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதே பாணியில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளது.
இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க வழிகாட்டியது; வழிகாட்டியும் வருகிறது. வட மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கினால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலையும் உருவாகி வருகிறது.
கர்நாடக தேர்தல் தோல்விக்குப் பிறகு இலவச திட்டங்களை பிரதமர் விமர்சிப்பதைத் தவிர்த்து வருகிறார் என்றாலும் கடந்த தேர்தல்களின் போது கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் நலத்திட்டங்களை இலவசம் எனக்கூறி எதிர்க்கும் பாஜக, தன் கொள்கைப்படி இலவசம் கூடவே கூடாது
என இனியும் கூற முடியுமா? அந்த வகையிலான திட்டங்களை முன்னெடுக்காமல் பிரசாரம் செய்ய முன்வருமா?
வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் பிரதமர் மோடியின் பிரசாரம் எப்படி இருக்கும்? இலவச திட்டங்களை எதிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!