fbpx
Homeதலையங்கம்‘மொபைல் முத்தம்மா’ திட்டம்!

‘மொபைல் முத்தம்மா’ திட்டம்!

நவீன காலத்தில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மொபைல்கள் இல்லாமல் மக்களை காணவே அரிதாக இருக்கிறது. கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும் அனைத்து காரியங்களையும் செய்து முடித்து விடலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

தற்போதெல்லாம் பணத்தை பெரும்பாலானோர் தங்கள் கைகளில் எடுத்து செல்வதில்லை. மாறாக மொபைல் போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்தி பணத்தைச் செலுத்துகின்றனர்.

சிறு டீக்கடைகள் முதல் மாலில் உள்ள பெரிய கடைகள் வரை அனைத்திலும் வாங்கப்படும் சிறு பொருளாக இருந்தாலும் சரி, தங்கள் மொபைல் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

மக்கள் இதற்கே பழகியுள்ளனர். இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளிலும் யுபிஐ (UPI) வசதி மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தற்போது இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக யுபிஐ மூலம் பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ‘மொபைல் முத்தம்மா’ என்ற பெயரில், எப்படி பணம் இல்லாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேசன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1700 க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ள நிலையில், 1500 க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப் படவுள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் இனி தங்கள் கைகளில் பணமில்லை என்றாலும், அதனை மொபைல் மூலம் செலுத்தலாம்.

இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு நிறைவேற்றி வருகிறது.

அதேபோல இது போன்ற நவீன வசதிகளை புகுத்துவதிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

ரேசன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கும் நடைமுறையை விரைவில் பிற மாநிலங்களும் அமல்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தும் தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கை பாராட்டத்தக்கது; வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img