தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் சீரமைக்கப்பட்ட அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல ஆண்டுகளாக என்டிபிஎல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி பங்களிப்பின் மூலம் நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் உயர்தரச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் முடநீக்கியல், மகப்பேறு, மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறைகளுக்கு ஏராளமான நவீன உபகரணங்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன.
இக்கல்லூரியின் செமினார் அறை மற்றும் விரிவுரையாளர் அறை ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக என்டிபிஎல் நிறுவனம் சார்பில் ரூ.1.02 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.3 கோடியே 19 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே 21 காலையில் நடைபெற்ற விழாவில் சீரமைக்கப்பட்ட அரங்குகள் என்டிபிஎல் நிர்வாகத்தால் மருத்துவக் கல்லூரிக்கு முறைப்படி அர்ப்ப ணிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் என்டிபிஎல் நிறுவன சிஇஓ அரவிந்த ராஜா, சிஎஸ்ஆர் நோடல் அதிகாரி ரகுபதி, அலுவலர் சரவணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் பத்மநாபன், துணை முதல்வர் கலைவாணி, ஆர்.எம்.ஓ சைலஸ் ஜெயமணி, முடநீக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பாவலன், முன்னாள் முதல்வர் சிவகுமார், துணை நிர்வாகி குமரன், சிஇஓ ஆனந்தராமானுஜம் மற்றும் பொதுப்பணித்துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



