fbpx
Homeதலையங்கம்காஸா போர்நிறுத்தம் சாத்தியமாகட்டும்!

காஸா போர்நிறுத்தம் சாத்தியமாகட்டும்!

மத்திய கிழக்கு நாடுகள் எப்போதும் பதற்றம் குறையாத பகுதிகள் என்ற அளவிற்கு பெயர் பெற்று விட்டன. இதற்கு தற்போதைய இஸ்ரேல் & ஹமாஸ் போரும் ஓர் உதாரணம். கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 310 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் நிலை தான் மிகவும் மோசமாக காணப்படுகிறது.

இஸ்ரேல் பகுதியில் இதுவரை 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,730 பேர் காயம் அடைந்துள்ளனர். காஸாவில் 27,947 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 12,150 பேர் குழந்தைகள். மேலும் 7,000 பேரை காணவில்லை. 67,459 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 390 பேர் உயிரிழந்துள்ளனர். 4,450 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஓர் அதிர்ச்சியூட்டும் விஷயம் இருக்கிறது. அதாவது, காஸா பகுதியில் மட்டும் மொத்த மக்கள்தொகையில் 1.8 சதவீதம் பேரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் நிலைமை மிகவும் மோசமடையும். எனவே போர் நிறுத்த நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டியது அவசியம். ஏற்கனவே அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் இரு தரப்பிலும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வர மும்முரம் காட்டி வருகின்றன.

இதில் இஸ்ரேல் இறங்கி வருவதில் தான் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன. இவரது பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. வரும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் ஜோ பைடன் போட்டியிடவில்லை. எனவே புதிய அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

அதற்குள் காஸாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜோ பைடன் நம்புகிறார்.
நானும் என்னுடைய குழுவினரும் காஸாவில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளோம்என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தப்பட வேண்டும் என்றே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் விரும்புகின்றன. போர் நிறுத்தம் சாத்தியமே; விரைவில் சாத்தியமாகட்டும்!

படிக்க வேண்டும்

spot_img