சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயது ஆகும் ஜெய் ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மிக இளம் வயதிலேயே அந்தப் பதவிக்கு வந்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். ஐசிசி தலைவர் பதவியில் அமரும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்று இருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் கிரிக்கெட் அமைப்புகளில் பொறுப்பு வகித்து தன் திறமையான உழைப்பை வெளிப்படுத்திய ஜெய் ஷா, தற்போது கிரிக்கெட்டின் மிக உயர்ந்த பதவியான ஐசிசி தலைவராகி இருக்கிறார். இது இந்தியாவிற்கு கிடைத்த கௌரவம் என்றால் மிகையாகாது.
2019 முதல் இப்போது வரை பிசிசிஐ செயலாளராக பணியாற்றி வந்த ஜெய் ஷா காலத்தில் தான் ஐபிஎல் தொடர் பல உச்சங்களை அடைந்தது. உலகிலேயே இரண்டாவது அதிக பணம் ஈட்டும் விளையாட்டுத் தொடராக ஐபிஎல் மாறியது. மேலும், இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. விராட் கோலி, ரோஹித் சர்மா என இரண்டு ஜாம்பவான்களை அவர் திறமையாக கையாண்டார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த போது கிரிக்கெட்டை ஆசியப் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பதில் ஜெய் ஷா தீவிரமாக இருந்தார். அதனை சாதித்தும் காட்டினார்.
தற்போது ஜெய் ஷா ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழலில் ஐசிசி தலைவர் பொறுப்புக்கு ஜெய் ஷா வந்திருப்பதால், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதில் ஜெய் ஷா முக்கிய பங்கு வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஜெய் ஷாவின் சாதனை பயணம் தொடரட்டும், வாழ்த்துகள்!