கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக டிஜிபியாக இருந்த நடராஜ் ஓய்வுக்கு பிறகு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சமீபத்தில் ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு, 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பியது. இந்த பட்டியல் அனுப்பி ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார்.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
வழக்கமாக தமிழ்நாடு அரசு முறைப்படி தேர்வு செய்து அனுப்பும் பைல்களுக்கு கையெழுத்து போட்டு அனுப்புவதுதான் ஆளுநரின் பணி என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
எந்த கோப்புகளுக்கும் அவர் கையெழுத்து போட்டு அனுப்புவது இல்லை. கிடப்பில் போடுவது, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திருப்பி அனுப்புவது என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதே நேரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய 18க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்தவர்கள் மீது ஒருசில குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு நேர்மையானர் என்பதாலும் சமூக நீதியின் அடிப்படையில், இதுவரை எந்த சமுதாயத்தில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லையோ அந்த சமூதாயத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதாலும் டிஜிபி சைலேந்திர பாபு பரிந்துரைக்கப்பட்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதின் அடிப்படையில் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார்.
ஆனால் அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிப்பதை ஆளுநர் எதிர்ப்பது புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டிற்கு நலன் தரும் அரசின் முடிவுகளை ஆளுநர் எதிர்ப்பது என்பது தமிழர்களை எதிர்ப்பதற்கு சமம்.
இதை அவர் உணர்ந்தும் உணராதது போல செயல்படுகிறார் என்பதை மக்கள் அறிவார்கள். ஆளுநருக்கு இதுவே வேலையாகி விட்டது என்ற சலிப்பும் மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது.
தமிழ்நாடு அரசின் எல்லா முடிவுகளையும் கண்மூடித்தனமாக நிராகரிப்பது ஆளுநருக்கு அழகல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல.
அதன் எதிர்மறை தாக்கம் எப்படி எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராவதற்கான அனுமதியை தரவேண்டும்.
இதுவே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை, எதிர்பார்ப்பு!