fbpx
Homeதலையங்கம்ஆளுநரைச் சூழும் போர் மேகம்!

ஆளுநரைச் சூழும் போர் மேகம்!

ஆளுநர்களைப் பொறுத்தவரை பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பெரும் வேற்றுமை உண்டு; அது என்ன?

பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர்களால் சிறுதுளி துன்பமும் இல்லை. அரசுக்கும் ஆளுநர்களுக்கும் நல்லுறவு மலர்ந்து மணக்கிறது. ஆனால் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களிலோ விதிவிலக்கின்றி ஆளுநர்களோடு மோதல் போக்கே காணப்படுகிறது; மக்கள் பணிகளை செய்யவிடாதபடி ஒருவித நெருக்கடியை ஆளுநர்கள் கொடுத்து வருகிறார்கள்.

இந்த மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையேயான உறவு அழுகி நாறுகிறது. மாநில அரசுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பது, தாமதப்படுத்துவது, திருப்பி அனுப்புவது என்பது தான் அவர்களின் முக்கியப் பணியாக நடந்து வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இப்படி நடப்பது இல்லையே, ஏன்? எல்லாம் அரசியல் தானோ? தமிழகத்திலும் இந்த நிலைதான். 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருக்கிறார்.

மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கூட அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக ஆளுநரை உச்சநீதிமன்றம் கண்டித்தது. ஆனாலும் அவரது அதே பிடிவாதம் தொடர்கிறது.

இது அல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிக்கடி சந்தித்து தமிழக அரசுக்கு எதிராக புகாரளிப்பது, இந்துத்துவம், சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநர் பேசுவது, கல்லூரி விழாக்களில் அரசியல் பேசுவது போன்றவற்றை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அடுத்த கட்டமாக, ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினரும் ஆதரவு அமைப்பினரும் போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறார்கள். தி.க. தலைவர் வீரமணி தலைமையில் போராட்டம் நடந்தது.

திராவிட இயக்க தமிழ் பேரவை சுபவீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தற்போது, டிசம்பர் இறுதியில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து தயாராகி வருகிறது.

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இப்படியொரு வேண்டாத மோதல் நீடிப்பதை ஒரு தமிழன் கூட மனப்பூர்வமாக விரும்ப மாட்டான். மக்கள் சேவைக்காகத் தான் முதல்வரும் இருக்கிறார்; ஆளுநரும் இருக்கிறார்.

இவர்களுக்கு இடையேயான மோதலால் பாதிக்கப்படுவது நாட்டு மக்கள் தான். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவை செயல்படுத்த விடாமல் ஆளுநர் தடுப்பது எந்த வகையில் நியாயம்? அப்படியானால் தேர்தல் எதற்கு? சட்டமன்றம் எதற்கு? இது ஜனநாயகத்துக்கு கேடு தானே? & இப்படித் தான் தற்போதைய தமிழர்களின் மனப்போக்கு மாறி இருக்கிறது.

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் மட்டும் போதாது; திருந்த வேண்டும்; இரு தரப்புக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். தமிழக அரசு தங்குதடையின்றி செயல்படும் சூழல் உருவாக வேண்டும்; உருவாக்கப்பட வேண்டும்.
இது நடக்குமா?

படிக்க வேண்டும்

spot_img