தேயிலை உற்பத்தியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் வளர்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி தனிக்கவனம் செலுத்தும் என்று வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா தெரிவித்தார்.
குன்னூரில் உள்ள விவேக் தனியார் தங்கும் விடுதியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விவசாயிகள், தேயிலை தொழில் மேம்பாட்டாளர்கள், தொழில் அதிபர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வங்கியின் சென்னை முதன்மைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணா பங்கேற்று பேசியதாவது:
அகில இந்திய அளவில் மிகப்பெரிய வளர்ச்சி கண்ட வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி, உலக அளவிலும் முதல் 50 வது இடத்தை பிடித்து சேவை புரிந்து வருகிறது. சராசரியாக 14,000 கோடி ரூபாய் வரை லாபமீட்டி வரும் பாரத ஸ்டேட் வங்கி, வெறும் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல் சேவை நோக்கோடும் வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றி வருகிறது.
ஆயுள் காப்பீட்டு வசதி
குறிப்பாக விவசாயிகள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதிகளை பாரத ஸ்டேட் வங்கி செய்து தருகிறது. தனி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கும் இந்த ஆயுள் காப்பீட்டு வசதி சேவையை வழங்கி வருகிறோம்.
குன்னூரில் தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி சேவை நோக்கோடு கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கியின் வளர்ச்சியும் இந்த சமுதாயத்தின் வளர்ச்சியையே குறிக்கும். அந்த வளர்ச்சிக்கு நான் எப்பொழுதும் உங்களுடன் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு முதன்மைப் பொது மேலாளர் ராதா கிருஷ்ணா பேசினார்.
இக்கருத்தரங்கத்தில் தேயிலை வாரிய துணை இயக்குனர் செல்வம், தேயிலை தொழிற்சாலைகளின் ஆலோசனை அதிகாரி பாரதிராஜா, உபாசி துணை இயக்குனர் உதயபானு, பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் நீரஜ்குமார் பாண்டே, கோவை மண்டல துணைப் பொதுமேலாளர் திலிப் சிங் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மற்றும் தொழில் அதிபர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



