ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஏற்பட்ட 4 முனைப் போட்டியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் & அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகியோருக்கு இடையே தான் நேரடி மோதல் இருந்தது.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அமோக வெற்றிவாகை சூடி இருக்கிறார். அவரது வெற்றிக்காக திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒரு நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இது இடைத்தேர்தல் அல்ல, எடைத் தேர்தல். இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா என எடை போட்டு நீங்கள் (மக்கள்) வழங்க வேண்டிய தீர்ப்பு தான் இந்த தேர்தல் நாள்
என்றும் இளங்கோவன் வெற்றி உறுதியாகி விட்டது
என்றும் பரப்புரை செய்தார்.
இலவச பேருந்து, மாணவர்களுக்கு காலை உணவு, உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என தான் நிறைவேற்றிய எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டு மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனும் தனது பிரசாரத்தின்போது, முதல்வர் ஸ்டலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள நல்ல திட்டங்கள் எனக்கு வெற்றியைத் தேடித்தரும்
என்றே பேசி வந்தார்.
அது தான் இன்றைக்கு மாபெரும் வெற்றியை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு தேடித் தந்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வருவது நல்லாட்சி தான் என்று ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் முதல் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.
7வது சுற்றில் 53,735 வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33,694 வாக்குகள் வித்தியாசம் உள்ள நிலையில் வெற்றி உறுதியாகி விட்டது- என்றாலும் இது மு.க.ஸ்டாலினுக்குக் கிடைத்த இமாலய வெற்றி என்று கூறுவதே பொருத்தமானது.
இந்த வெற்றி இதோடு நிற்கப்போவதில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தொடரட்டும்; தேர்தல் வெற்றி வெற்றிகளும் தொடரட்டும்!