fbpx
Homeதலையங்கம்ஓபிஎஸ்-ஐ வீழ்த்திய எடப்பாடி பழனிசாமி!

ஓபிஎஸ்-ஐ வீழ்த்திய எடப்பாடி பழனிசாமி!

ஈரோட்டில் நடக்கும் ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கே அதிமுக – பாஜக கூட்டணி பல களேபரங்களை நடத்தி முடித்து விட்டது. மாறி மாறி ஆலோசனை, பாஜக தலைவருடன் சந்திப்பு என்று ஒரு முடிவு எட்டப்படாத நிலையில்…வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளாக இன்று இருக்கும் நிலையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒருவழியாக நேற்று ஒதுக்கித் தந்து விட்டது. ஆனாலும் பாஜக & அதிமுக கூட்டணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை போன்றது, அது என்றும் தெளியாது என்பது இந்த இடைத்தேர்தல் நமக்கு தந்திருக்கும் செய்தி. அதிமுக ஒன்றிணைவதை பாஜகவினர் விரும்ப மாட்டார்கள். அந்தக் கட்சியை அழித்து அதன் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கிறது என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

சுதந்திரமாக வேட்பாளரை கூட அறிவிக்க முடியாத நிலைக்கு இபிஎஸ் தள்ளப்பட்டு விட்டார். அவருக்கும் ஓபிஎஸ்க்கும் ஜெயலலிதா தலைவரா, அண்ணாமலை தலைவரா? என்பது கூட தெரியாத அளவிற்கு அவர்களின் செயல்பாடு அமைந்திருந்தது.

வேட்பாளரை அறிவிப்பதற்கு கூட பாஜக முடிவுக்காகக் காத்திருக்கும் நிலை இருந்தது. அதனால் தான் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பாஜகவின் அடிமைகள் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.

ஒவ்வொரு விஷயத்திற்கும் அண்ணாமலையிடம் போய் அதிமுக நிர்வாகிகள் கருத்தைக் கேட்டு வருகின்றனர், இதற்கு பேசாமல் பாஜக உடன் அதிமுகவை இணைத்துவிடலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா–? என அதிமுக தொண்டர்களே வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

எது எப்படியோ ஈரோடு கிழக்குத் தொகுதியில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக களமிறங்கி விட்டது. வலுவான காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை எதிர்த்து அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார்.

வரப்போகும் இந்த தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி தனது முதல் எதிரியான ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்தி இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. இதனைத் தான் வெற்றியாக அவரது தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் பகைத்துக் கொள்ளாமலும் தேர்தலில் போட்டியிடாமலும் பாஜகவும் சதுரங்க சூதாட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உண்மையான வெற்றிக்கனியைப் பறிக்கப்போவது யார்?

படிக்க வேண்டும்

spot_img