fbpx
Homeதலையங்கம்அமலாக்கத்துறைக்கு தொடர் பின்னடைவு!

அமலாக்கத்துறைக்கு தொடர் பின்னடைவு!

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு முதல் அவருக்கு நேற்று காவேரி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது வரை எல்லா நிகழ்வுகளையும் கோர்த்துப் பார்த்தால் அமலாக்கத்துறை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்திருப்பதை உணரமுடியும்.

உண்மையில் செந்தில்பாலாஜி விஷயத்தில் அமலாக்கத்துறை அசிங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக எங்கு ரெய்டு நடத்தினாலும் இத்தனை கிலோ தங்கத்தை கைப்பற்றினோம், இத்தனை கோடி பணம் பறிமுதல் செய்தோம், இன்னின்ன ஆவணங்களைக் கைப்பற்றினோம் என்று பறை சாற்றுவார்கள்.

ஆனால் செந்தில் பாலாஜி வசமிருந்து எதைக் கைப்பற்றினார்கள்? ஒரு தகவலையும் அறிவிக்கவில்லை. இதுவே அமலாக்கத்துறைக்கு முதல் பின்னடைவு.

கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்து விட வேண்டும என திட்டமிட்டிருந்தது அமலாக்கத்துறை. செந்தில்பாலாஜி உடல்நலம் பாதித்ததால் அவரை தமிழ்நாட்டு நீதிமன்றமே நீதிமன்றக்காவலுக்கு அனுப்பியது. அமலாக்கத்துறையின் டெல்லி திட்டம் தவிடுபொடியானது. இது அடுத்த பின்னடைவு.

ஓரிரு நாட்களில் இருதய அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையிலும மனிதாபிமானமே இல்லாமல் செந்தில்பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முனைந்தது. விசாரிக்க முடிந்ததா? முடியவில்லையே. இதுவும் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு.

அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் அனுமதித்தது. இது இன்னோர் பின்னடைவு.
சென்னை உயர்நீதிமன்றத்தை நம்பாமல் உச்சநீதிமன்றம் போனது அமலாக்கத்துறை.

அவசர வழக்காக விசாரிக்கக் கோரியது. இஎஸ்ஐ மருத்துவக்குழு பரிந்துரையை சுட்டிக்காட்டி நிராகரித்தது உச்சநீதிமன்றம். இந்த பின்னடைவால் யாருக்கு அவமானம்?

செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்ததை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவையும் நேற்று உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. உயர்நீதிமன்றத்தையே அணுக அறிவுறுத்தியது. இதுவும் அமலாக்கத்துறைக்கு பின்னடைவு தானே?.

கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு போலீஸ் காவலைப் பெற முடியாது என்கிறது சட்டம். தேன் கூட்டில் கை வைத்தாற் போல அவசரப்பட்டு கைது செய்து, இப்போது செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை.

இந்திய சட்டங்கள் ஒவ்வொன்றும் மனித நேயத்தை மையமாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன. சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பினர் யாராக இருந்தாலும் அதனைப் புறக்கணித்தால் அவர்கள் நீதிமன்றங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img