மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்த கல்விக்கொள்கையை ஆராய குழு ஒன்று தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து தான் புதிய கல்வி கொள்கை விஷயத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில் பார்த்தால் மொத்தமுள்ள ரூ.3,586 கோடியில் தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். இதில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இருப்பினும் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது.
இதற்கு புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த முன்வராததே காரணம் என்று சொல்லாமல் சொல்கிறது மத்திய அரசு. இதனால் இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் படிப்பிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
மாணவர்களைப் பாதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் இந்த போக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருக்கிறது என்பதை மறந்து விட்டு, நிதியை நிறுத்திவைத்து புதிய கல்விக் கொள்கையை ஏற்குமாறு மத்திய அரசு அழுத்தம் தருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்மொழி திட்டம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டின் திமுக அரசு ஒருபோதும் ஏற்காது என்பது வெள்ளிடமலை. அதிலும் மும்மொழிக் கொள்கையை, தமிழகத்தின் மீது திணிப்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம். இது மத்திய அரசுக்கும் பாஜக தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.
எனவே, புதிய கல்விக் கொள்கையை காரணம் காட்டி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி ஆகும்.
அதிலும் கல்விக்கான நிதியை ஒதுக்க மறுப்பது என்பது கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு சமமானது. இதனை மத்திய அரசே செய்யலாமா? எனவே 573 கோடி ரூபாயை உடனே மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
கல்வி விஷயத்தில் மோதல் வேண்டாம்!