டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அது பின்னாளில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு அளித்தது.
அதன்படி டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. எனவே ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்தும் செய்யும் வகையில் புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு உடனடியாக முடிவு செய்தது. இதற்காக கடந்த மே 19ம் தேதி அன்றே மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
டெல்லி அரசின் முடிவோடு வேறுபடுவதற்கும், மறுபரிசீலனைக்காக கோப்புகளைத் திருப்பி அனுப்புவதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரத்தை உறுதிப்படுத்துவது தான் புதிய அவசர சட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதன்படி துணை நிலை ஆளுநரின் அனுமதி இல்லாமல் அதிகாரிகளை மாற்றும் விஷயத்தில் முடிவுகளை அரசால் எடுக்க முடியாது.
அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கே தரும் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அரசுக்கு உள்ள அதிகாரிகளை கட்டுப்படுத்தும் உரிமையை பறிக்கும் சட்டத்தை உருவாக்குவதன் மூலம், அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளை நாடாளுமன்றம் ரத்து செய்ய முடியுமா? என்பதை அரசியலமைப்பு பெஞ்ச் ஆராயும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த மசோதாவை எப்போது தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் இந்த மசோதாவை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக எதிர்த்து வருகிறார். மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்ப்பதாக உறுதி அளித்துள்ளன. இந்த மசோதா மக்களவையில் எளிதில் வென்றுவிடும். ஏனெனில் அங்கு பாஜகவுக்கு அறுதிபெரும்பான்மை இருக்கிறது. ஆனால் ராஜ்யசபாவில் மசோதா வெற்றி பெறுவதில் சிக்கல் உள்ளது.
கெஜ்ரிவாலின் முயற்சி வெற்றி பெறுமா?