fbpx
Homeதலையங்கம்சுங்கத் துறை தேர்வில் வடமாநிலத்தவர் முறைகேடு!

சுங்கத் துறை தேர்வில் வடமாநிலத்தவர் முறைகேடு!

சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கேன்டீன் அசிஸ்டண்ட் மற்றும் டிரைவர் வேலைக்கு காலி பணியிடங்கள் இருந்தன. இதற்கு 10 அல்லது 12ம் வகுப்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என சுங்கத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

17 காலி பணியிடங்களுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ரூ.30 ஆயிரம் சம்பளம் மற்றும் சென்னையிலேயே வேலை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த தேர்வில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு நடந்து கொண்டிருந்த போது ஒரு இளைஞர் வித்தியாசமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் சிறிய அளவிலான புளூடூத் கருவியை காதில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய சோதனையில் அவர் வயிற்றில் சிம்கார்டு போடும் கருவியை ஒட்டி, அதனை பயன்படுத்தி வெளி நபரின் உதவியுடன் தேர்வு எழுதியது தெரியவந்தது.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஹரியானா, பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 பேர் இவ்வாறு தேர்வு எழுதுகின்றனர் என்ற தகவலை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது தொடர்பான 30 பேரிடமும் விசாரணை நடைபெற்று அவர்களிடம் இருந்து புளூடூத் மற்றும் சிம்கார்டு கருவி பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நடந்த தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நூதன முறையில் மோசடியாக தேர்வு எழுதியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஒரே நேரத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 30 பேர் தேர்வில் முறைகேடு செய்திருப்பதை கண்டுபிடித்து இருப்பது இது முதல்தடவையாக இருக்கலாம். ஆனால் இதேபோல முறைகேடுகள் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த பல போட்டித் தேர்வுகளில் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது இந்த பேரதிர்ச்சி சம்பவம்.

ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை பணிக்கான தமிழ்மொழி போட்டித் தேர்வில் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறாத நிலையில், அனைத்து இடங்களுக்கும் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வட இந்தியர்கள் மோசடியின் மூலமாகவே வெற்றி பெறுகிறார்களா? என்ற ஐயம் எழுந்திருந்தது.

இப்போது மோசடியில் ஈடுபட்ட 30 பேர் ஒரேநாளில் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஐயம் மேலும் வலுவடைந்திருந்தது. அரசுப் பணிகள், குறிப்பாக மத்திய அரசு பணிகள், குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்த பணிகளில் தகுதியானவர்களும், திறமையானவர்களும், உள்ளூர் மக்களும் அமர்த்தப்படுவதற்கு பதிலாக, பணியிடங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத சிலர் மோசடியான வழிகளில் அந்த வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது நியாயமான கோரிக்கை என்பதற்கு இந்தத் தேர்வு முறைகேடு ஒன்றே போதுமானது.

இந்த மோசடியின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு விட்ட சந்தேகத்தைத் போக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img