இந்திய பங்குச் சந்தையில் “பங்கு கையாளுதலில் மோசடி” என்ற குற்றச்சாட்டுகள் குறித்த ஹிண்டன்பர்க் குழுமத்தின் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது.
இது குறித்து நிபுணர்கள் குழு அமைத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அப்போது, பங்குச் சந்தைக்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய நிபுணர்கள் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றத்தின் முன்மொழிவுக்கு ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் சீலிடப்பட்ட பரிந்துரை கடிதம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் “முழு வெளிப்படைத்தன்மையை நாங்கள் பராமரிக்க விரும்புவதால் உங்களது சீல் செய்யப்பட்ட கவர் பரிந்துரையை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியதோடு அதனைத் திருப்பியும் அளித்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழுவை நியமிப்பது தொடர்பான உத்தரவையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது. குழுவில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் அல்லது மனுதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை ஏற்கமாட்டோம், ஆனால் நீதிமன்றமே நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜெ.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு ஒன்றிய அரசுக்கு குட்டு வைத்துள்ளது.
நாட்டில் சர்ச்சைக்குரிய எந்த விவகாரத்திலும் தனக்கு பாதிப்பு வரும் என்று கருதினால் மவுனம் சாதிப்பதும் விசாரணையை நீர்த்துப்போக வைப்பதும் ஆளும் பாஜக அரசின் கொள்கையாகவே மாறிவிட்டது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதானி விவகாரமே அதற்கு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. வெளிப்படையான விசாரணைக்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பதையே உச்சநீதிமன்றத்தில் வெளிப்படுத்தி உள்ளது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது மிகச்சரியானதே.
அதானி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. ஒன்றிய அரசிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. உச்சநீதிமன்றமே அதனை வெளிப்படுத்தும் பணியைத் தொடங்கி இருக்கிறது.
நடுநிலையான தீர்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!