2024 மக்களவைத் தேர்தலுக் கான செமி ஃபைனல்ஸ்… இப்படியொரு அறிமுகத் தோடுதான் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தேசமே எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதில் 4-ல் 3 மாநிலங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது பாஜக. அத்துடன் சத்தீஸ்கர், ராஜஸ்தானை காங்கிரஸிடமிருந்து பாஜக பறித்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் வெற்றித் தடம் பதித்துள்ள தெலங்கானாவிலும் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், சிறப்பாக ஏற்றம் கண்டுள்ளது பாஜக.
பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தது. தற்போது கூடுதலாக ராஜஸ்தான், சத்தீஷ்கரிலும் பாஜக வென்றுள்ளதன் மூலம் அந்தக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது, உத்தரகாண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு மவுசு இன்னமும் சற்றும் குறையாமல் இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் சுருங்கி விட்டது. தற்போது வெறும் 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.
கர்நாடகா, இமாசல பிரதேசம் ஆட்சியில் உள்ள நிலையில், தற்போது தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்து இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தாலும் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரபிரதேசத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை.
என்றாலும் 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு உணர்த்துவது என்ன? இந்தியா கூட்டணியின் செல்வாக்கு குறையுமா? 2024 மக்களவை தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பதே இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸை நோக்கி எழுப்பப்படும் கேள்வி.
மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்தும் அளவிற்கு இந்தியா கூட்டணியை கட்டுக் குலையாமல் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக இக்கூட்டணி கட்சிகள் ஒற்றுமை குலையாமல் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
கட்சியில் உட்பூசல்களை சரி செய்வதும் காங்கிரஸுக்கு முக்கியமான மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஃசெமி பைனலில் வென்று ஃபைனலுக்கு பாஜக தேர்வாகி விட்டது. தற்போது தோல்வியைத் தழுவினாலும் இறுதிப்போட்டியில் பாஜகவோடு மோதப்போவது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தான்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடந்தது போல வெற்றி மாறலாம், மாறாமல் நீடிக்கவும் செய்யலாம். இரு அணிகளும் இந்திய அணிகள் தானே. இறுதிப்போட்டிக்கான களம் தயாராகட்டும் – வாழ்த்துகள்!



