கரூர் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.59.83 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.பிரசன்னா ராமசாமி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.51.24 லட்சம் மதிப்பில் லட்சுமிபுரம் முதல் பூமண்டம்பாளையம் வழியாக நெடுங்கூர் வரை 1.375 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், கற்பிக்கும் முறை மற்றும் சமையலறை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடி, தரமான உணவு வழங்க அறிவுறுத்தினார்.
ஆரியூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சு.தனசேகரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



