அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கியுள்ளது. இவர்கள் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தித் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் அதற்கான அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் நவம்பர் 7ம் தேதி முதல் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கார்கில் மலை கவுன்சில் தேர்தல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.
கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இரு யூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், லடாக்கின் கார்கில் மலை கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. லடாக்கில் கார்கில் மற்றும் லே மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரம் இருக்கிறது.
தன்னாட்சி மலையக கவுன்சில்கள் கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி, நில பயன்பாடு, வரி விதிப்பு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவுகளை எடுக்கிறது. கார்கில் மாவட்டத்தை பொறுத்த அளவில் தற்போதுள்ள கவுன்சிலின் பதவிக்காலம் இந்த மாதம் 1ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது.
முன்னதாக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பெரோஸ் அகமது கான் இந்த கவுன்சிலுக்கு தலைவராக இருந்தார். தற்போது பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 95,388 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நி¬லையில் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களில் வென்றுள்ளது.
காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அங்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக பாஜக கூறி வந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந்த வெற்றி வரப்போகும் 5 மாநிலத் தேர்தல்களிலும் அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று இந்தியா
கூட்டணி நம்புகிறது.
வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு இந்தியா கூட்டணி கடுமையான போட்டியைத் தரும் என்று ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டு பேட்டி தந்தது நினைவிருக்கலாம்.
ஆக, இந்திய தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது!