தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவிகிதம் வரை கட்டண உயர்வை அமல்படுத்தும் அறிவிப்பு வெளியாகி அனைத்துத் தரப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதாவது செப்டம்பர் 1ம் தேதி முதல் விக்கிரவாண்டி, ஓமலூர், சமயபுரம், கிருஷ்ணகிரி உள்பட தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை எகிறப்போகிறது. இதனால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளப்போவது அன்றாட பிழைப்புக்காக வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை, எளிய மக்கள் தான்.
சுங்கச்சாவடி கட்டண உயர்ந்தவுடனே சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வது நிச்சயம். சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரப்போவதையும் தவிர்க்க முடியாது.
சாலை வசதியென்பது ஒரு அரசு குடிமக்களுக்கு செய்து தர வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். அது ஆடம்பரம் அல்ல. அந்த அத்தியாவசிய வசதியை செய்து தருவதற்கு இப்படி குடிமக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை தேவையா? தேவையில்லையா? என்ற ஒரு கேள்வியை நாட்டின் மக்களிடம் குரல் ஓட்டெடுப்புக்கு விட்டால் வேண்டாம் என்பது தான் ஒரே பதிலாக சத்தமாகப் பதிவு செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால் இன்றைக்கு வாகனம் இல்லாத வீடே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. பல வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பதை காண முடிகிறது. அந்த அளவிற்கு மக்களின் பொருளாதார வாழ்க்கையில் வாகனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆம், மக்களின் அடிப்படைத் தேவையாகவே வாகனங்கள் மாறி இருக்கின்றன.
அதனால் தான் மக்களின் ஒருமித்த எதிர்ப்புக் குரல் அதிகம் கேட்கிறது. அதனை எதிரொலிக்கும் வகையில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் சுங்க கட்டண உயர்வுக்கு தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்படும்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டே அந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டது. இதை உணர்ந்து சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்.
படிப்படியாக நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்!