கோவை, நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் PWPC, RCD, கம்போடியா தேசிய பாரா ஒலிம்பிக்குழு இணைந்து கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பெண்ணுரிமைக் குரல், பெண்ணாற்றல், பெண் சமத்துவம், பெண் பாதுகாப்பு, பெண் ஆளுமை, ஆகியவற்றை விளக்கும் Sheroes Fest எனும் தலைப்பில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு மலேசியா, கம்போடியா, ஜிம்பாப்வே, நேபாளம், போன்ற பல நாடுகளிலிருந்து சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கத்தை சிறப்பு அழைப்பாளர்கள் ஒளியேற்றி தொடங்கிவைத்தனர்.
நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் வாழ்த்துரை வழங்கினார்.
PWPCவின் பொதுச்செயலர் திவ்யா சண்முகம் கருத்தரங்கின் நோக்கத்தினை முன்மொழிந்தார். அப்போது பெண்களின் பன்முக ஆளுமைத் தன்மைகளையும்
சமூகத்திற்கான சிறந்த பங்களிப் பினையும் எடுத்துரைத்தார்.
சேவா ஜெனவாவின் நிறுவனர், ஆலோசகர், செயல்பாட்டுக்குழுவின் தலைவர் நிர்மலா ராவட், அறிமுகவுரை ஆற்றினார். அப்போது தற்போது நடைபெற்ற கொல்கத்தா பெண்மருத்துவரின் நிலைமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கம்போடியா தேசிய பாரா ஒலிம்பிக்குழுவின் தொழில்நுட்பப் பிரதிநிதி ஷான்ங் ஷோக்லிப் பேசுகையில், சமூகத்தில் பெண்களின் நிலை, பணிபுரியும் இடங்களில் பெண்களின் நிலை, கல்வியில் பெண்களின் நிலை குறித்து விளக்கினார். பன்னாட் டுக் கருத்தரங்கின் நினைவு மலரினைக் கோவை, Women center மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்த ராஜ், வெளியிட்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் உறுப்பினரும், நிர்மலா மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலரும், நிறுவனருமான முனைவர் வாசுகி வாழ்த்திப் பேசினார்.
அவர் தனது உரையில், நேரில் பார்க்கக் கூடிய கடவுளாக விளங்கும் தாயின் சிறப்பு, 90 சதவீதத்திற்கும், மேற்பட்டோர் பெண் ஆசிரியர்களே என்றும், கல்வியில் முக்கியப் பங்கும், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கும் வகிப்பவர்கள் பெண்களே என்றும், சத்திரபதி சிவாஜியின் தாய், வேலுநாச்சியார், ஜான்சிராணி, மற்றும் பாரதிக்கு ஊக்கம் கொடுத்து பெண்ணுரிமையைப் பாடவைத்த சகோதரி நிவேதிதா பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
கோவை, Women center மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந் தராஜ், அவர்கள் தம்முடைய மருத்துவ அனுபவங்கள், பெண்ணின் வலிமை, நிர்மலா மகளிர் கல்லூரியில் தான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் நினைவு கூர்ந்தார்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர், பத்மினி அவர்கள் தம் சிறப்புரையில் திருநங்கைகளின் இருப்பினைக் கூறிய இலக்கியங்கள், இலக்கணங்கள், பைபிள் பதிவுகளையும் கவிமணி, பாரதி ஆகியோர் குறிப் பிட்ட பெண்சக்தி பற்றியும் வெளிப்படுத்தினார்.
ரோட்டரி கிளப் கவர்னர், வழக்கறிஞர் சுந்தரவடிவேல் பேசுகையில், பெண்ணுரிமை பற்றிய சட்டம், பெண்களின் ஆற்றல், பெண்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது முக்கியம், இதற்காக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிர்மலா மகளிர் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் அருட் சகோதரி எமல்டா மேரி நன்றி கூறினார். உணவு இடைவேளைக்குப் பின் சுகுணா கல்வி நிறுவனத்தின், தமிழ்த்துறைப் பேராசிரியர், பேச்சாளர் சாந்தாமணி சிறப்பு அமர்வோடு தொடங்கியது. பலர் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துக் கருத்தரங்கினைச் சிறப்பித்தனர். பின் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
இரண்டாம் நாள் காலையில் சிறப்பு அமர்வுகளும், மாணவியர் தம் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்புமிக்க பன்னாட்டுக் கருத்தரங்கில் 302 ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றன.
நிறைவு விழாவில் முனைவர் அருணாதேவராஜ் (மூலிகை அறிவியலாளர், முன்னாள் துறைத்தலைவர், விலங்கியல் துறை, பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, கருத்தரங்கின் சிறப்பு, மகளிர் நலம், மூலிகைகளின் பயன்பாடு குறித்து விளக்கினார். கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநர், முனைவர் கலைச்செல்வி பெண்கல்வியின் முக்கியத்துவம், பெண்ணாற்றல், விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்து வாழ்த்திப் பேசினார்.
ரோட்டரி சங்க நிர்வாகி கற்பகம் சான்றிதழ் வழங்குதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக இணைய வழியில் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளிக்கப் பட்டன