fbpx
Homeதலையங்கம்அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா?

அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா?

அதிமுக, பாஜக தொண்டர்கள் வீதியில் இறங்கி ஒருவருக்கு எதிராக ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது, அரசியல் அரங்கில் கவனம் பெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த வேகத்தில் அதிமுக கூட்டணியில் இவ்வளவு சலசலப்பு உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பாஜகவிலிருந்து அண்ணாமலையுடனான மோதலில் பலர் வெளியேறுவதும், நேராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைவதும் நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சியினருக்கே ஸ்கெட்ச் போடும் வேலையை பாஜகவே இவ்வளவு காலம் செய்து வந்த நிலையில் பாஜகவிடமே எடப்பாடி பழனிசாமி செய்கிறார் என அதிமுகவுக்குள் பேச்சுக்கள் எழுகின்றன.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியை துரோகி என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். இந்த செயலுக்கும் எதிர்வினை இருக்கும்“ என தெரிவித்தார்.

இரு கட்சித் தொண்டர்களும் வீதியில் இறங்கி எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் எவ்வாறு தேர்தல் வேலைகளில் இணைந்து செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்கையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக -& பாஜக கூட்டணி உடைந்து இரு அணிகளாக களமிறங்க வாய்ப்பு உருவாகி வருகிறதோ என்ற விவாதம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சசிகலா, ஓபிஎஸ் இருவரையும் கட்சியில் இணைக்க வேண்டும், டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அவ்வாறே செல்லும் பட்சத்தில் பாஜக தனது தலைமையில் ஒரு அணியை அமைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
ஓபிஎஸ்,- சசிகலா ஆகியோரை இணைத்துக் கொண்டு தேமுதிக, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, ஐஜேகே போன்ற கட்சிகளை உள்ளடக்கி பாஜக கூட்டணி அமைக்கலாம்.

அதிமுக தலைமையில் தமாகா, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெறலாம். பாமகவையும் தங்கள் கூட்டணிக்கு இணைக்க முயற்சிக்கலாம்.
இதையெல்லாம் பார்க்கும் போது அதிமுக – பாஜக கூட்டணி முறியவே அதிக வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img