உலகளவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது வேதனை தரும் விஷயமாக மாறி உள்ளது. நாள்தோறும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலீசாரால் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கடுமையான தண்ட னைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போதெல்லாம் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை, 20 ஆண்டுகள் சிறை என தண்டனைகள் கடுமையாகத் தான் இருக்கின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. நாளிதழைப் புரட்டினாலே சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் செய்திகள் ஒன்றிரண்டாவது இடம்பெற்றிருக்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒன்று, நாடு முழுவதும் பேசும்பொருளாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஜன்சத் டவுன் என்ற பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமியை கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 2 மர்ம நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர். சிறுமியை ஒரு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் குழந்தையை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். இதில் அந்த சிறுமி மூர்ச்சையாகி உயிரிழந்துள்ளார். இதைவிட கொடுமையான குற்றம் வேறு என்ன இருக்க முடியும்?
இந்த வழக்கில் சோனி என்ற சுரேந்தர் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. போக்சோ நீதிமன்ற நீதிபதி பாபுராம், குற்றவாளிகளில் ஒருவரான சிறுமியை கொலை செய்த சோனிக்கு தூக்கு தண்டனையும் மற்றொரு குற்றவாளியான ராஜேஷுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் கொடுத்து அதிரடி தீர்ப்பளித் துள்ளார். மரண தண்டனை விதித்திருப்பது மற்றவர்களுக்கு பாடம் புகட்டும் ஒரு தீர்ப்பாகவும் தண்டனையாகவும் அமைந்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறுமிகளுக்கு இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுக்க தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க பெற்றோரின் பங்கும் மிகமிக முக்கியம். கண்ணை இமை காப்பது போல பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் கண்காணித்து பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். இளம்பெண்கள் விழிப்புடன் இருந்து தேவைப்பட்டால் காவல்துறையின் உதவியை நாடி தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.
பாலியல் வன்கொடுமை நடக்கக் கூடாது அல்லது குறைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு என்ன வழி? மரண தண்டனை, அதிக ஆண்டுகள் சிறை தண்டனை தருவது போன்ற அச்சத்தை ஏற்படுத்தும் அதிரடி தீர்ப்புகளால் தான் அதைச் செய்ய முடியும். தாமதமின்றி தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
நீதிமன்றங்களின் அதிரடி தீர்ப்புகள் தொடரட்டும் – பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறையட்டும்!