இடதுசாரி தலைவர்கள் தங்கள் உடலை மரணத்திற்கு பின் தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த மாதம் 80 வயதில் மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், சிபிஐ(எம்) தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாயின் உடல் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
34 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்தார் ஜோதிபாசு. கடந்த ஏப்ரல் 2003 இல் அவர் தனது உடலை தானம் செய்வதாக அறிவித்தார்.
கடந்த 2010 இல் அவர் இறந்த பிறகு கொல்கத்தாவின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு ஜோதி பாசு உடல் தானமாக வழங்கப்பட்டது.
முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர். அவர் 2000 ஆம் ஆண்டில் தனது உடலை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்தார்.
2018 இல் சோம்நாத் சாட்டர்ஜி இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் அவரது விருப்பத்தை நிறைவேற்றினர்.
இதேபோல முன்னாள் சிபிஐ(எம்) செயலாளர் அனில் பிஸ்வாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெனாய் சவுத்ரி ஆகியோர் தங்கள் உடலை தானம் செய்த சில இடதுசாரி தலைவர்கள் ஆவார்கள்.
அறிவியலுக்கு தனது உடலை தானம் செய்ததன் மூலம், கடந்த காலங்களில் உடல் தானம் செய்த இடதுசாரி தலைவர்களின் நீண்ட பட்டியலில் சீதாராம் யெச்சூரியும் இணைந்துள்ளார். அவரது உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.
வாழும் காலத்தில் மண்ணுக்கும், மக்களுக்காகவும் உழைக்கும் தலைவர்களின் உடல், மறைந்த பின்னும் கல்விக்காகவும், ஆராய்ச் சிக்காகவும் பயனளிக்கிறது.
அவை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவியலை மேம்படுத்த உதவுகின்றன, எதிர்கால மருத்துவர்கள் மனித உடற்கூறியல் மற்றும் மருத்துவர்கள் புதிய அறுவை சிகிச்சை முறைகளை உருவாக்க தானம் செய்யப்பட்ட இந்த உடல்கள் பயன்படுகின்றன.
தலைவர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும் உடல் தானம் செய்ய வேண்டும் என்பது தான் சீதாராம் யெச்சூரி சொல்லிச் சென்றுள்ள பாடம்.
சிறந்த அரசியல் தலைவராக நாட்டுக்காக உழைத்த, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நட்பு பாராட்டிய சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டுக்கே பேரிழப்பு. நாடே அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.
72 வயதிலேயே மறைந்தாலும் சீதாராம் யெச்சூரியின் புகழ் இந்திய வரலாற்றில் நீங்காமல் எப்போதும் இடம் பிடித்திருக்கும்!



